“திமுக சார்பில் ‘நிழல் அமைச்சரவை’ அமைக்க வேண்டும்!”

தி.மு.க.விற்கு ஒரு வேண்டுகோள்:

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வலிமையான எதிர்க்கட்சி என்ற பொறுப்பை வழங்கியுள்ளனர். தி.மு.க.வின் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையிலும், மக்களாட்சி தத்துவத்தின் மாண்புகளை போற்றி பேணி காத்திடவும், தி.மு.கழகம் சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உறுப்பினர்களை உள்ளடக்கிய “நிழல் அமைச்சரவை” (Shadow cabinet) அமைக்க வேண்டுகிறோம்.

இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட “westminister” நாடாளுமன்ற ஜனநாயகம் கடைபிடிக்கப்படும் நாடுகளில் எதிர்கட்சி உறுப்பினர்களை கொண்ட “நிழல் அமைச்சரவை” (Shadow cabinet) ஒன்று இயங்குவது வழக்கம். அந்த நடைமுறையை ஒட்டி தமிழ்நாட்டிலும் இந்த ஆரோக்கியமான மரபு பின்பற்றப்படவேண்டும். இது ஒரு தொடக்கமாக இருந்து, நாளை எந்த கட்சி எதிர்கட்சியாக வந்தாலும் இந்த நடைமுறை தொடர வேண்டும். இங்கிலாந்து நாட்டில் அரசே நிழல் அமைச்சரவைக்கு ஆகும் செலவுகளை ஏற்றுக் கொள்கிறது.

எதிர்கட்சி தலைவரின் தலைமையில், ஒவ்வொரு துறையிலும் தகுதியும், திறமையும், அனுபவமும் வாய்ந்த 32 சட்டமன்ற உறுபினர்கள் இடம்பெறவேண்டும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு துறை ஒதுக்கப்பட்டு. அவர்கள் தங்கள் துறை சார்ந்த சட்டமன்ற விவாதங்களில் பங்கேற்பதுடன், அவரவர் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்/அலுவலர்களின் நடவடிக்கைகளை, அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் குறித்து கவனமாக ஆராயவேண்டும்.

  1. அந்தந்த அரசு துறைகளில் நடைபெறும் முறைகேடுகளை, அதிகார துஷ்பிரயோகங்களை மக்கள் மன்றத்திலும் சட்ட மன்றத்திலும் முன்வைக்கவேண்டும்.
  2. குழு உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் துறை சார்ந்த அரசின் செயல்பாடுகளை அவ்வப்போது தமிழ்நாடெங்கும் சுற்று பயணம் செய்து கண்காணிக்க வேண்டும்.
  3. பத்திரிக்கைகள், தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் பல்வேறு சமூக ஊடகங்கள் வாயிலாக தங்களுடைய கருத்துக்களை முன்வைக்கவேண்டும்.
  4. இதுமட்டுமின்றி குழுவில் இடம்பெற்றிருக்கும் உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் துறை சார்ந்த வல்லுனர்களை கலந்து ஆலோசித்து அத்துறை சார்பில் நிறைவேற்றப்படவேண்டிய மக்கள் நலத்திட்டங்கள் குறித்தான வரைவு செயல் திட்டங்களை மக்கள் மன்றத்தில் முன்வைக்கவேண்டும்.
  5. எதிர்கட்சி தலைவர் தலைமையிலான இக்குழு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கூடி விவாதிக்கும், அதன் நடவடிக்கைகள் வெளிப்படையாக பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படவேண்டும்.

உதாரணமாக

பொது பணித்துறை

அமைச்சர் – நிழல் அமைச்சர்

திரு. எடப்பாடி பழனிச்சாமி  (எடப்பாடி தொகுதி) – திரு. துரைமுருகன் (காட்பாடி தொகுதி)

பள்ளி கல்வித்துறை

திரு. பெஞ்சமின் (மதுரவாயல் தொகுதி) – திரு. தங்கம் தென்னரசு (திருச்சுழி தொகுதி )

தி.மு.க. கடந்த 5 ஆண்டுகளாக நடந்த எந்த மக்கள் போராட்டத்திலும் மக்களின் பக்கம் நிற்கவில்லை அல்லது ஒரு நிலைப்பாடு எடுக்கவில்லை. அது கூடங்குளம், நியூற்றினோ, கெயில், மீதேன், இயற்கை வள சுரண்டல் என்று எந்த பிரச்சனையிலும் மக்களின் பக்கம் நிற்கவில்லை. தி.மு.க. வின் கோட்டையாக இருந்த டெல்டா மாவட்டங்களில் கூட அதிக தொகுதிகளில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு ஒரு காரணம் மீதேன் திட்டத்தை அனுமதித்தது, மேற்கு மாவட்டங்களில் அதிக தோல்விகளை சந்தித்தற்கு ஒரு காரணம் கெயில் திட்டத்தில் மக்களின் பக்கம் நிற்காமல் போனது. தேனி மாவட்டத்தில் மொத்தமாக தோல்வியை தழுவியதற்கு காரணம் நியூற்றினோ திட்டத்தில் ஒரு நிலைப்பாடு எடுக்காமல் போனது, கூடங்குளம் விசயத்தில் ஒரு நிலைப்பாடு எடுக்காததும் ஒரு காரணம், இவைகள் மட்டும் தான் காரணம் என்று சொல்லவில்லை, ஆனால் இவையும் ஒரு முக்கியமான காரணம். தி.மு.க. அடுத்ததாக செய்யக்கூடிய விசயம், எழுவர் விடுதலை. தன்னுடைய தோழமை கட்சியான காங்கிரஸ் இந்த விசயத்தில் ஒரு முடிவு எடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். காங்கிரஸ் கட்சியை நிர்பந்தித்து எழுவர் விடுதலையை ஆதரிக்க வைக்க தி.மு.க வால் முடியும், அதை செய்ய வேண்டும்.

இந்த படிப்பினைகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மக்களின் பக்கம் நின்றால் நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான எதிர்கட்சியாக தி.மு.க. செயல்பட முடியும்.

– சுந்தர் ராஜன்