’யாத்திசை’ தமிழக வாழ்வியலை படம் பிடித்துள்ளது என்று சொல்ல முடியாது!

-கே.என்.சிவராமன் பதிவு-

#யாத்திசை

‘Spartacus’, ‘Apocalypto’, ‘300’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் தாக்கத்தில் உருவாகியிருக்கும் மறவர் குடிகளின் பெருமைகளைப் பேசும் படமே ‘யாத்திசை’.

பெரும்‘பள்ளி’கள் என்ற சமூகத்திடம் உதவி கேட்டு பாண்டிய மன்னன் செல்கிறான். உதவ ஒப்புக்கொள்ளும் பெரும்‘பள்ளி’கள் என்றுமே தாங்கள் பாண்டியர்களின் விசுவாசிகள்தான் என்று சொல்லிவிட்டு இப்போது உதவுவதற்கு ஈடாக தங்கள் குடி பெண்ணை பாண்டியன் மணக்க வேண்டுமென்று நிபந்தனை அல்ல; வேண்டுகோள் வைக்கிறார்கள். ஏற்கும் பாண்டியன், பதிலுக்கு பெரும்‘பள்ளி’ பெண்ணுக்கும் தனக்கும் பிறக்கும் குழந்தை பாண்டிய அரசனாக மாட்டான்… சம்மதம் என்றால் மணக்கிறேன் என வேண்டுகோள் அல்ல; நிபந்தனை விதிக்கிறான்.

இப்படியாக தென் திசை சாதி மேலாதிக்கத்தை வலியுறுத்தும் இந்தப் படம் கூடவே இன்னொன்றையும் செய்திருக்கிறது.

அது, ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் ஒடுக்கும் சமூகத்தையும் ஒரே தராசில் நிறுத்தியிருப்பது.

ஒடுக்கப்பட்ட சமூகம் கிளர்ந்து எழ முயற்சிப்பது தங்கள் உரிமையை, சுதந்திரத்தை நிலைநிறுத்த.

மாறாக ஒடுக்கும் சமூகம், இவர்களை தடுக்க நினைப்பது ‘அதிகாரத்தை’ நிலை நிறுத்த.

இந்தப் படமோ உரிமை – சுதந்திரத்துக்கான எயினரின் போராட்டமும்; இதை தடுக்க நினைக்கும் பாண்டியர்களின் முன்னெடுப்பும் ‘அதிகாரம்’ என்ற ஒன்றே ஒன்றுக்காகதான் என்கிறது.

‘யாத்திசை’ ராஜா – ராணி படம் என்று சொல்லியிருந்தால் பிரச்னையே எழுந்திருக்காது. மாறாக மிகத் தெளிவாக பொது யுகம் 600 – 700ல் தென் தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னன் ரணதீரனின் காலத்தில் நடைப்பெற்ற ‘வரலாற்றை’ கற்பனைக் கலந்து சொல்லியிருக்கிறோம் என அறிவித்திருப்பதுதான் பல்வேறு விதமான வினாக்கள் வேர்விட காரணம்.

ஏனெனில் ‘யாத்திசை’ காண்பித்திருப்பது வரலாறே அல்ல; தமிழக சரித்திரத்தின் ஒரு துளி கூட இதில் பதிவாகவில்லை.

‘விடுதலை’ படம் வெளியானபோது எண்ணற்ற விவாதங்கள் நடைபெற்றன. அதில் முக்கியமானது பல்வேறு காலங்களில் நடைப்பெற்ற பல்வேறு சம்பவங்களை ஒரே காலத்தில் நடந்ததாக இணைத்திருப்பது என்ற குற்றச்சாட்டு.

ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னால் அந்தந்த கால வரலாறு இருக்கிறது… அதைக் குறித்து ‘விடுதலை’ உரையாடவேயில்லை… இருட்டடிப்பு செய்திருக்கிறது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

‘யாத்திசை’க்கும் இது பொருந்தும். பொது யுகத்துக்கு முன் நடந்த நிகழ்வுகளை எல்லாம் பொது யுகத்துக்கு பின் 600 – 700ல் நடந்ததாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

எயினர், குறும்பர், கடம்பர்… என எண்ணற்ற பழங்குடியினரை வீழ்த்தி – அப்புறப்படுத்திவிட்டுதான் தமிழகத்தில் ‘அரசு’ தோன்றியது என்பது வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இவை நடந்தது பொது யுகத்துக்கு முன்; அதாவது கி.மு.வில். இதற்குப் பின்னால் அந்தந்த கால வரலாற்றுத் தேவைகள் இருந்தன.

தலையாலங்காலத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகட்டும்; கரிகால சோழனாகட்டும்… தங்களைத் தவிர்த்த மற்ற இரு வேந்தர்களுடன் இணைந்து வந்த 5க்கும் மேற்பட்ட வேளிர்களை போரில் வென்றார்கள் என்கின்றன சங்ககால இலக்கியங்களும் ஆய்வுகளும். போலவே சேரன் செங்குட்டுவனும் பழங்குடினரை வென்றே தனது கடல் ஆதிக்கத்தை பலப்படுத்தினான்.

இவை எல்லாம் கி.மு.வில் – பொது யுகத்துக்கு முன் – அரங்கேறியவை. அல்லது கி.பி. – பொது யுகத்துக்கு பின் – 2ம் நூற்றாண்டுக்குள் நிகழ்ந்தவை.

‘யாத்திசை’ சொல்லும் கி.பி. – பொது யுகத்துக்கு பின் – 600 – 700ல் வேளிர்களும் எயினர், குறும்பர், கடம்பர்… உள்ளிட்ட பழங்குடியினரும் தனித்து இல்லை. மக்களுடனும் அதிகார வர்க்கத்துடனும் இரண்டற கலந்திருந்தார்கள். அப்போது குறுநில மன்னர்கள் என்ற பிரிவினரே அரசு துருப்புகளுடன் கைகோர்த்திருந்தார்கள்.

மட்டுமல்ல; தமிழகத்தில் பாலையும் இல்லை. மருதமும் முல்லையும் திரிந்து பாலையாகும் என்கின்றன தரவுகள். கூடவே பெருவழிப் பாதைகளை ஒட்டி எயினர்கள் வசித்ததாக சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதன் பின்னரான காலத்தில் பெருவழிகளில் வழிப்பறிகள் நடந்ததால் வணிகர்கள் தங்களுக்கென வீரர்களை வைத்துக் கொள்ள அரசுகள் அனுமதித்தன என்கின்றன ஆய்வு முடிகள்.

முக்கியமான விஷயம், சோழர்கள் குறித்த ‘யாத்திசை’யின் பிம்பம். உண்மையில் ரணதீரனின் சொந்தத் தாயாரே – அரிகேசரி மாறவர்மனின் மனைவியே – சோழ இளவரசிதான்! மலையும் அடர் வனமும் சூழ்ந்த பகுதியில் சோழர்கள் அப்போது தலைமறைவாக வாழவில்லை!

படம் முன்வைக்கும் காலத்தில் உலகளவில் அனைத்து நதி நாகரீகங்களும் அரசுகளாக வேரூன்றியிருந்தன; பேரரசாக வளர்வதற்கான விதைகள் தூவப்பட்டிருந்தன. அந்தந்த பகுதி சார்ந்த சிறு / குறு வழிபாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பெரும் மதமாக உருபெறத் தொடங்கியிருந்தன.

மகேந்திரவர்ம பல்லவனும்; ரணதீரனின் தந்தையான அரிகேசரி மாறவர்மனும் ஏறக்குறைய ஒரே காலத்தில்தான் – சில பத்தாண்டுகளுக்குள்தான் – சமண மதத்தில் இருந்து சைவத்துக்கு மாறினார்கள்.

பொது யுகம் 600 – 700ல் தமிழகத்தின் வாழ்நிலை – மக்களின் வாழ்வாதாரம் – உலகிலுள்ள மற்ற நாடுகளை விட உயர்ந்திருந்தது. இதை அராபியர்களும், சீனர்களும் பதிவு செய்திருக்கிறார்கள்; சாவகம் – கடாரம் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளின் பிரதிகள் ஆவணப்படுத்தி உள்ளன.

பொது யுகத்துக்கு முன் – கி.மு.விலேயே பருத்தி ஆடைகளுக்கு உலகளவில் புகழ்பெற்ற கேந்திரமாக தமிழகமே திகழ்ந்தது. கிரேக்க / ரோமானியர்கள் தமிழகத்தின் பருத்தி ஆடைகளையே அணிந்தார்கள். மிளகு, முத்துக்கள் மட்டுமல்ல… தமிழகத்தின் பருத்தியும் தங்கம் / நவரத்தினங்களுக்கு ஈடாக கொள்முதல் செய்யப்பட்டன.

மாயன் நாகரீகத்தில் நடைபெற்ற சம்பவமாக புனையப்பட்ட ‘Apocalypto’வும் சரி… கிரேக்க / ரோமானிய ஸ்பார்ட்டகஸும் சரி… காலம்தோறும் அனைத்து மொழி படைப்பாளிகளிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியபடியே இருக்கும்; இருப்பார்கள். அதை தங்கள் மண் / பிரதேசத்தில் பொறுத்திப் பார்க்க ஒவ்வொரு கலைஞனும் முற்படுவது இயல்பானது; அரசியல் செயல்தந்திரமிக்கது.

ஆனால், அதை எந்தக் காலத்தில் – வரலாற்றில் வைத்து உரையாடலை எப்படி தொடங்குகிறோம் என்பதில் இருக்கிறது அந்தப் படைப்பாளியின் அரசியல்.

நவகண்டம், கொற்றவை வழிபாடு, வேலன் வழிபாடு எல்லாம் இலக்கியப் பிரதிகளை முன்வைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனாலேயே இப்படம் தமிழக வாழ்வியலை படம் பிடித்துள்ளது என்று சொல்ல முடியாது. வேண்டுமானால் வழிபாடுகளை ஆவணப்படுத்த முயற்சித்துள்ளது எனலாம்.

‘யாத்திசை’ மறவர்களின் மேலாதிக்கத்தை வலியுறுத்தும் ஒரு படம். இதற்காக தமிழக வரலாற்றையே மாற்றியிருக்கிறார்கள்.

ராஜா – ராணி படமாக அறிவிக்காமல்; பாண்டிய மன்னன் ரணதீரன் – எயினர் என ஏன் அடையாளப்படுத்தியுள்ளனர் என்ற கேள்விக்கான விடையில் அடங்கியிருக்கிறது தமிழகத்தின் உண்மையான வரலாறு.

# # #

Read previous post:
0a1a
எதிர்ப்பு எதிரொலி: 12 மணி நேர வேலை மசோதாவை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் அறிவிப்பு

தனியார் நிறுவனங்களில் உழைக்கும் பணியாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல்

Close