பத்மபிரியா இப்படி மட்டும் தான் பேச முடியும்!

பொதுவாக சில கொளுந்துகள் இருப்பார்கள். ”பார்ப்பனர் என்பதாலேயே ஒருவரை எதிர்க்கக் கூடாது” என பேசுவார்கள். ”பாஸ்.. அவங்க மாறிட்டாங்க.. முன்ன மாதிரி இல்ல!” “Family-க்காகதான் பூணூல் போட்டிருக்கார். பட் இவரு ப்ரொக்ரஸிவ்”. “பார்ப்பனரா இருந்தாலும் அவங்க ஒரு பெண். இந்த ஆணாதிக்க உலகத்துல அவங்கள நம்மதான் சப்போர்ட் பண்ணனும்”. “அவர் குடுமி வச்சுக்கிறது அவர் இஷ்டம். அதெல்லாம் விமர்சிக்கிறது தப்பு”

-என ஏராளமான கொளுந்துகள் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் வரை இக்கொளுந்துகளில் ஒன்றாக அடியேனும் இருந்தேன் என கூறிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். மேற்குறிப்பிட்ட வாக்கியங்களின் பாணியில் நானும் ஒரு பார்ப்பனருக்கு கம்பு சுற்றியிருக்கிறேன்…

கமல்ஹாசன்…!

அந்த பார்ப்பனர் ‘மனுநீதியை அப்டேட் செய்ய வேண்டும்’, ‘அப்பாவின் பெயர் ஸ்ரீநிவாச அய்யங்கார்’ போன்ற பொன்முத்துகளை உதிர்த்தபோதும் சுதாரித்துக் கொள்ளாமல் ’மனு நீதி மய்யம்’ ஆரம்பித்த பிறகுதான் விழிப்புக்குள்ளானேன். வருமான வரி கட்டுவதை பற்றிய புகழ் தேடல், சமூக நலத் திட்டங்களை இலவசமென கொச்சைப்படுத்துவது என பார்ப்பனருக்கே உரிய puritism-தான் இவர்களின் அரசியல்.

அன்னாரின் வழியில் வந்திருக்கும் பத்மபிரியா எந்தவித ஆச்சரியமும் கொடுக்க முடியாது. ஆர்எஸ்எஸ் மற்றும் முதலாளித்துவம் முன் வைக்கும் meritocracy உட்பட்ட பல விஷயங்கள்தான் இவர்களுக்கு அடையாளங்கள்.

சில பல்லக்கு தூக்கிகளை தங்களுக்கென இவர்கள் வாடகையின்றி அமர்த்திக் கொள்வது உண்டு. அவர்களை Liberal-கள் அல்லது தாராளவாதிகள் என குறிப்பிடலாம். அல்லது கொளுந்துகள் என்றும் சொல்லலாம்.

ஒரு அரசியல் கட்சி தொடங்கும் நபர் தனக்கான வேட்பாளர்களாக டிவியில் வந்தோர், யூ ட்யூபில் பேசுவோர், சமூக தளத்தில் following வைத்திருப்போர் போன்றோரை தேர்ந்தெடுப்பாரா? அப்படிதான் தேர்ந்தெடுக்கிறார் எனில் அவரின் கட்சி கொள்கை என்ன? பிரபலமாக இருப்பது மட்டும்தானா?

கொள்கை என ஒன்றை கொண்டு, அதை செயல்படுத்தவென ஒரு திட்டம் உருவாக்கி அதை நம்புவோரை உறுப்பினராக்கி, பயிற்றுவித்து கொள்கைக்கென போராடி அதில் சிறந்தோரை வேட்பாளராக்குவது தானே ஒரு கட்சி செய்யக் கூடிய வேலை?

பத்மபிரியா சுற்றுச்சூழல் தாக்க திருத்தத்தை எதிர்த்து பேசிய காணொளியை நானும் பகிர்ந்தேன். அதன் அர்த்தம் பத்மபிரியாவை நான் ஆதரிக்கிறேன் என்பது அல்ல. அவர் பேசியதை ஆதரிப்பது மட்டுமே என் நிலைப்பாடு. அதாவது ஒரு பிரச்சினை சார்ந்து ஒருவர் வெளிப்படுத்தும் கருத்தை ஆதரிக்கும் தன்மை. Issue based ஆதரவு.

இந்த தன்மையை புரிந்து கொள்வதில்தான் தாராளவாதிகள் பலர் கோட்டை விட்டு பல்லக்கு தூக்கிகள் ஆகிவிடுகின்றனர்.

Issue based ஆதரவு என்பது என்ன?

ஹிட்லர் அழிய வேண்டும் என்பது issue. அதற்காக மட்டும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் கைகோர்த்து போருக்கு செல்வதே issue based ஆதரவு என்பது. அதற்கு அர்த்தம் அமெரிக்காவையோ பிரிட்டனையோ முழுமையாக ஸ்டாலின் ஆதரித்தார் என்பது அல்ல.

அரசியல் தேர்வு என வரும்போது அமெரிக்கா யார், பிரிட்டன் யார், கமல் யார், பத்மபிரியா யார் என தெரிந்து கொண்டு முடிவெடுப்பதே தெளிவோர் எடுக்கும் நிலைப்பாடு.

மற்றபடி பெண் என்பதற்காக பத்மபிரியாவை ஆதரிப்பது, ரசிகன் என்பதால் கமலை ஆதரிப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதற்காக இருவரையும் ஆதரிப்பது எல்லாம் பல்லக்கு தூக்கிகளின் வேலை.

எனவே பத்மபிரியா இப்படி மட்டும்தான் பேச முடியும். ஆச்சரியமுமில்லை. அனுதாபமும் இல்லை.

சுபம்.

ராஜசங்கீதன்