தீதும் நன்றும் – விமர்சனம்

நடிப்பு – ராசு ரஞ்சித், ஈசன், சந்திப்ராஜ், அபர்ணா பாலமுரளி, லிஜிமோல் ஜோஸ்

இயக்கம் – ராசு ரஞ்சித்

இசை – சி.சத்யா

தயாரிப்பு – என்ஹெச் சில்வர் ஸ்கிரீன்ஸ் – ஹெச்.சார்லஸ்

#

நண்பர்களான ராசு ரஞ்சித், ஈசன், சந்தீப் ராஜ் ஆகியோர் சிறு சிறு திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு திருட்டின் போது ராசு ரஞ்சித், ஈசன் போலீசிடம் சிக்கி சிறைக்கு சென்றுவிடுகிறார்கள். சந்தீப் ராஜ் தப்பித்துவிடுகிறார். சிறையில் இருந்து வெளியே வரும் ராசு ரஞ்சித் மற்றும் ஈசன் திருடுவதை நிறுத்திவிட, அவர்களுடன் மீண்டும் இணையும் சந்தீப் ராஜ், செய்யும் துரோகத்தால் நண்பர்களின் வாழ்க்கை, தடம் மாறி சின்னாபின்னமாகிறது. அது என்ன? என்பது தான் படத்தின் கதை.

n4

உயிர் கொடுக்கும் நட்பு, துரோகம் செய்யும் நட்பு, என நட்பை மையப்படுத்திய கருவை இயல்பாகவும், கமர்ஷியலாகவும் சொல்லும் படம் தமிழ் சினிமாவில் பல வந்திருந்தாலும், இந்த படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை படத்தை ரசிக்க வைக்கிறது.

கதாநாயகர்களாக நடித்திருக்கும் ராசு ரஞ்சித், ஈசன் இருவரும் கதாப்பாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருப்பதோடு, நடிப்பிலும் எந்த குறையும் வைக்கவில்லை. வில்லனாக நடித்திருக்கும் சந்தீப் ராஜும் கவனிக்க வைக்கிறார்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி, லிஜிமோல் ஜோஸ் இருவரும் அரிதாரம் பூசாத அழகிலும், அளவான நடிப்பிலும்கவர்கிறார்கள். அபர்ணா பாலமுரளியின் கதாப்பாத்திரம், காதலால் வாழ்க்கையை இழந்து பரிதவிக்கும் பெண்களின் நிலையை பிரதிபலிக்கிறது.

ஹீரோக்களின் நண்பராக வரும் இன்பா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். காலயன் சத்யா, கருணாகரன் ஆகியோரின் நடிப்பும் கச்சிதம்.

கெவின் ராஜின் ஒளிப்பதிவு கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்துள்ளது. சி.சத்யாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.

படத்தை இயக்கியிருக்கும் ராசு ரஞ்சித் தான் படத்தொகுப்பும் செய்திருக்கிறார். தான் சொல்வது ரசிகர்களுக்கு பழக்கப்பட்ட கதை தான் என்றாலும், திரைக்கதை மற்றும் படத்தொகுப்பு மூலம் கூடுதல் சுவாரஸ்யத்தோடு சொல்லியிருக்கிறார்.

திருட்டு வேலைகளில் நண்பர்கள் ஈடுபடும் காட்சிகள் விறுவிறுப்பாக உள்ளது. குறிப்பாக டாஸ்மாக்கில் திருடும் போது, அங்கு போலீஸ் வர, அதில் இருந்து எப்படி தப்பிக்க போகிறார்கள், என்ற எதிர்ப்பார்ப்பும் அதனை தொடர்ந்து வரும் சம்பவங்களும் படத்தை ரசிக்க வைக்கிறது.

முதல் பாதி முழுவதையும் சுவாரஸ்யமாகவும், எதிர்ப்பார்ப்புடனும் நகர்த்தும் இயக்குநர், இரண்டாம் பாதியில், இதை தான் சொல்லப் போகிறார், என்பது சற்று யூகிக்கும்படி இருந்தாலும், நேர்த்தியான திரைக்கதை மற்றும் காட்சிகள் படத்தை வேகமாக நகர்த்தியிருக்கிறது.

‘தீதும் நன்றும்’ நேர்த்தி