தமிழரசன் – விமர்சனம்

நடிப்பு: விஜய் ஆண்டனி,  ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, ராதாரவி, சோனு சூட், யோகிபாபு , மாஸ்டர் பிரணவ் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: பாபு யோகேஸ்வரன்

ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர்

படத்தொகுப்பு: புவன் சந்திரசேகர்

இசை: இளையராஜா

தயாரிப்பு: ’எஸ்.என்.எஸ். மூவிஸ்’ கெளசல்யா ராணி

பத்திரிகை தொடர்பு: மௌனம் ரவி, மணவை புவன்

0a1b

தமிழரசன் (விஜய் ஆண்டனி) நேர்மையும், கருணை உள்ளமும் கொண்ட தூய்மையான காவல்துறை அதிகாரி. மாமூலுக்காக கை நீட்டும் பழக்கம் இல்லாத அவர், தனது நியாயமான சம்பளத்தில் தன் மனைவி லீனா (ரம்யா நம்பீசன்), பத்து வயது மகன் கேப்டன் பிரபாகரன் (மாஸ்டர் பிரணவ்) உடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே, மகன் கேப்டன் பிரபாகரனுக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. கார்ப்பரேட் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கிறார்கள். மருத்துவத்தை பொருளீட்டும் பெருவணிகமாக மட்டுமே பார்க்கும் அந்த மருத்துவமனை நிர்வாகம், சிறுவனுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அதற்கு எழுபது லட்ச ரூபாய் செலவாகும் என்கிறது. தமிழரசனால் அவ்வளவு பணம் புரட்ட முடியவில்லை. ஆகவே கெஞ்சுகிறார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இறங்கி வருவதாக இல்லை. இதனால் கோபமடையும் தமிழரசன், மகனின் உயிரைக் காப்பாற்ற எடுக்கும் அதிரடி முடிவும், அதன்பிறகு நடக்கும் திருப்பங்களும் தான் ‘தமிழரசன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

விஜய் ஆண்டனி ஏற்கெனவே சில படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள போதிலும், அந்த கதாபாத்திரங்களில் இருந்து தமிழரசன் கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டது. அதிரடி ஆக்சன், சேசிங் போன்ற காட்சிகள் இல்லை. அதற்கு பதிலாக நல்ல கணவன், நல்ல தந்தை என காட்டும் அழுத்தமான குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் உண்டு. இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனின் மனைவி லீனாவாக ரம்யா நம்பீசன் நடித்து இருக்கிறார். கணவன் மீது கொண்டிருக்கும் காதல், மகனின் நிலையறிந்து ஏற்படும் துக்கம் என அனைத்து வித உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகனின் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் பிரணவ் நல்வரவு.

யோகிபாபு, கும்கி அஸ்வின், ரோபோ சங்கர் போன்றோர் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

சுரேஷ் கோபி, சோனு சூட், ராதா ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், சங்கீதா, கஸ்தூரி என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருப்பது படத்திற்கு பலம் சேர்க்கிறது.

தனியார் மருத்துவத் துறையில் நடக்கும் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில் கதை, திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் பாபு யோகேஸ்வரன். ஒரு கமர்சியல் படத்தில் சமூகத்துக்குத் தேவையான நல்ல மெசேஜ் சொன்னதற்காக இயக்குனரை பாராட்டலாம்.

கதையின் கணிசமான பகுதி ஒரு மருத்துவமனைக்குள்ளேயே நடக்கிறது என்ற போதிலும், அது பற்றிய சோர்வு ஏற்படாதவகையில் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர்.

இசை இளையராஜாவாம்! பாடல்களிலும் சுவை இல்லை; பின்னணி இசையிலும் உயிரில்லை.

‘தமிழரசன்’ – குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்!