நோட்டா – விமர்சனம்

பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃபை சில மாதங்களுக்குமுன் அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக பதவி நீக்கம் செய்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கும். நவாஸ் ஷெரிஃப் மிகப் பெரிய அளவில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கும் சில மாதங்களுக்குமுன் இதே குற்றச்சாட்டையும், அது தொடர்பான ஆதாரங்களையும் எதிர்கொள்ள முடியாமல் ஐஸ்லாந்து பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர்கள் மட்டுமல்ல, இவர்களைப் போல் உலக அளவில் பல அரசியல் தலைவர்கள் கருப்புப் பணத்தை ரகசியமாக பதுக்கி வைத்திருப்பது அம்பலமாகி, சிக்கலில் சிக்கிக்கொள்ள ஒரே காரணம் ‘பனாமா ஆவணங்களின் கசிவு’.

2015ஆம் ஆண்டு பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொஸாக் ஃபொன்செக நிறுவனத்தின் கோடிக்கணக்கான ரகசிய ஆவணங்கள் ஒரு ஹேக்கரால் ஹேக் செய்யப்பட்டு, கசிய விடப்பட்டதையடுத்து, உலகின் அதிகாரமிக்கவர்களும் செல்வந்தவர்களும் தங்கள் செல்வத்தைப் பதுக்கவும், வரி ஏய்ப்புச் செய்யவும் உதவும் நாடுகளை எப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த ‘பனாமா ஆவணங்களின் கசிவு’ விவகாரத்தையும், அதே காலகட்டத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த ஒருவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் பதவி பறிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த சில சம்பவங்களையும் இணைத்து, நிறைய கற்பனைச் சரடுகளைத் திணித்து, ஷான் என்பவர் எழுதிய ‘வெட்டாட்டம்’ என்ற சினிமாத்தனமான தமிழ் மசாலா நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் ‘நோட்டா’.

தமிழக முதலமைச்சராகவும், ஆளுங்கட்சித் தலைவராகவும் இருக்கிறார் முன்னாள் சினிமா நட்சத்திரமான வினோதன் (நாசர்). சத்யானந்தா என்ற கார்ப்பரேட் சாமியாரின் தீவிர பக்தரான அவர், அந்த சாமியார் கூறும் அறிவுரைகளை ஏற்று அதன்படி செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஒரு ஊழல் விவகாரத்தில் சிக்குகிறார் முதலமைச்சர் வினோதன். இந்த ஊழல் வழக்கு டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடக்கிறது. சாமியாரின் அறிவுரைப்படி, தன்னை நேர்மையானவராகக் காட்டிக்கொள்ள வினோதன் தற்காலிகமாக பதவி விலகவும், ஆட்சியை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ள வசதியாக தனது மகன் வருண் (விஜய் தேவரகொண்டா) முதல்வராக இருக்கவும் சம்மதிக்கிறார்.

லண்டனில் படித்துவிட்டு, அரசியலில் துளியும் ஆர்வம் இல்லாமல் நண்பர்களுடன் மது போதையில் சுற்றித் திரியும் வருண், ‘தற்காலிக ஏற்பாடு’ என்ற புரிதலுடன், வேண்டா வெறுப்பாக ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்றுக் கொள்கிறார். அதற்குப் பிறகும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்குப் போய் பணி புரியாமல், வினோதனின் உத்தரவுப்படி வீட்டிலேயே இருந்துகொண்டு வீடியோ கேம் விளையாடியபடி பொழுதைக் கழிக்கிறார் புதிய முதல்வர் வருண்.

வினோதனின் எதிர்பார்ப்புக்கு மாறாக, ஊழல் வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வருகிறது. அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டு,, கைது செய்யப்பட்டு, டெல்லி சிறையில் அடைக்கப்படுகிறார். இதைக் கண்டித்து, அவரது விருப்பம் மற்றும் தூண்டுதலின்பேரில் தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் பயங்கர கலவரத்தில் ஈடுபடுகின்றனர். பள்ளிக்கூட பேருந்து ஒன்றுக்கு கலவரக்காரர்கள் தீ வைக்க, அதில் ஒரு சிறுமி சிக்கி பரிதாபமாகக் கருகி உயிரிழக்கிறாள். இதுவரை ஏனோதானோ என்றிருந்த முதல்வர் வருணின் மனச்சாட்சியை இச்சம்பவம் உலுக்கி எடுத்துவிடுகிறது. அவர் முதல் முறையாக பொறுப்புள்ள முதல்வராக களம் இறங்குகிறார். கலவரம் செய்பவர்கள் தனது கட்சிக்காரர்களாகவே இருந்தாலும் சுட்டுக் கொல்லும்படி போலீசுக்கு உத்தரவிடுகிறார். மேலும், வினோதனின் கைதைக் கண்டித்து தனது கட்சிக்காரர்கள் தத்தமது வீடுகளுக்குள்ளேயே இருந்து 3 நாட்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும்படி கேட்டுக்கொள்கிறார். இதற்கு நல்ல பலன் கிடைக்கிறது. கலவரம் உடனே அடங்கி அமைதி திரும்புகிறது.

முதல்வர் வருணின் இந்நடவடிக்கை, சிறையிலிருக்கும் வினோதனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. வருணை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, வேறொரு டம்மிப் பீஸை முதல்வராக்க முடிவு செய்கிறார். ஆனால், ஜாமீன் கிடைத்து அவர் சிறையிலிருந்து வெளியே வரும்போது, மர்ம நபர்களின் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு ஆளாகி, பலத்த காயங்களுடன் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

முன்னாள் முதல்வரான வினோதனை படுகொலை செய்ய முயன்றவர்கள் யார்? ஏன்? கோமா நிலையிலிருந்த வினோதனுக்கு நினைவு திரும்பியதா? அவர் வருணை பதவியில் இருந்து நீக்க முயற்சி செய்தாரா? முதல்வர் வருண் தனக்கு எதிரான சவால்களை, ஆபத்துக்களை எப்படி அணுகினார்? என்பது மீதிக்கதை.

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தமிழில் அறிமுகமாகும் இந்த முதல் படத்திலேயே வலுவான அடித்தளம் அமைத்திருக்கிறார். முதலில் தான்தோன்றித்தனமாகத் திரியும் ஜாலியான இளைஞன், பின்னர் விளையாட்டுத்தனமான முதல்வர், அதன்பின்னர் மிகுந்த பொறுப்புள்ள முதல்வர் என மூன்று பரிணாமங்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். தெலுங்கு வாடை சிறிதுமின்றி, சொந்தக் குரலிலேயே நேர்த்தியாக தமிழ் வசனங்களைப் பேசியிருப்பது அவரது அக்கறையைக் காட்டுகிறது. இனி நல்ல நல்ல நேரடித் தமிழ்ப்படங்களில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

ஊழல் முதல்வராக வரும் நாசர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் கதை நகர்வுக்கு மிக முக்கியமான கருவியாகச் செயல்பட்டிருக்கிறார். விஜய் தேவரகொண்டாவுக்கு ஆலோசனைகள் வழங்கும் கதாபாத்திரத்தில் வரும் சத்யராஜ், அவரது உண்மையான தோற்றத்திலேயே வந்து ரசிக்க வைக்கிறார். அமைச்சரவையில் நிரந்தரமாகவே  நம்பர் டூ அந்தஸ்தில் இருப்பவராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் ரசிகர்களின் மனதில் நிறைகிறார்.

சத்யராஜின் மகளாகவும், நிருபராகவும் வரும் மெஹ்ரீன் பிர்சாடாவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவரின் மகளாகவும், அக்கட்சியின் மகளிர் அணித் தலைவியாகவும் வரும் சஞ்சனா நடராஜன் பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார். விஜய் தேவரகொண்டாவின் சினேகிதியாக வரும் ‘பிக்பாஸ் 2’ யாஷிகா இரண்டொரு காட்சிகளில் மட்டும் வந்து, வழக்கம்போல் தாராளம் காட்டிவிட்டுப் போகிறார்.

சந்தானகிருஷ்ணன் ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவு தரம். சாம் சி.எஸ்.இசையில் பாடல்கள் ஓ.கே. ரகம்.. பின்னணி இசை படத்தின் பரபரப்போடு ஒன்றிப்போகிறது. ரேமண்ட் கச்சிதமாக எடிட்டிங் செய்திருக்கிறார்.

சமகால தமிழக அரசியலில் உள்ள முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டும் வகையில் சில காட்சிகளை அமைத்த விதத்தில் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் கவனம் பெறுகிறார். செம்பரம்பாக்கம் ஏரி நீரைத் திறந்து விடுதல், முதல்வர் கோமா நிலை, கூவத்தூர் ரிசார்ட் விடுதி, நம்பிக்கை வாக்கெடுப்பு, வெள்ள மீட்புப் பணி என தலைப்புச் செய்திகளாக தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகள் காட்சிகளாக உள்ளன. ஆனால், இவை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் வெறுமனே கடந்துபோகும் அளவுக்கு திரைக்கதை பலவீனமாக உள்ளது. அதுபோல், ‘பனாமா ஆவணங்களின் கசிவு’ என்ற மிக முக்கிய விவகாரம், ரசிகர்கள் மட்டும் அல்ல, விமர்சகர்கள் கூட ஆழ்ந்து கவனிக்க முடியாதவாறு ரொம்ப மேலோட்டமாகக் காட்டப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை. மேலும், படத்தின் பெயரில் தான் ‘நோட்டா’ இருக்கிறதே தவிர, கதையில் இல்லை. பிறகு ஏன் இந்த பெயர் சூட்டப்பட்டதோ, தெரியவில்லை. ஊழல்வாதியான நாசரின் கட்சிக்கொடி முழுக்க முழுக்க சிவப்பு நிறத்தில் இருப்பதாகக் காட்டியிருப்பது, இயக்குநரின் கம்யூனிச எதிர்ப்பு அரிப்பை சொரிந்துகொள்ள மட்டுமே…

‘நோட்டா’ – ஒருமுறை பார்க்கலாம்!