“சாதிய முரண்களை உடைக்கிற படங்களை மக்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்”: பா.இரஞ்சித்

தமிழ் மக்களின் மனமேறி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் ‘பரியேறும் பெருமாள்’. உலகெங்கும் வெற்றிநடை போட்டுவரும் இப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும், நம் மக்களின் மனசாட்சியின் வடிவமான காட்சிகளும் தான். சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாகப் பதிவு செய்த இப்படத்திற்கு மக்கள் அளித்துவரும் மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா.ஆர்.கே, கலை இயக்குநர் ராமு மற்றும் தெருக்கூத்துக் கலைஞர் தங்கராஜ் (படத்தில்  பரியனின் தந்தையாக நடித்தவர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

p4

படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் பேசும்போது, “இது கொண்டாட்டமான மனநிலை. ‘பரியேறும் பெருமாள்’ போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயங்காட்டினார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற, சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை மக்கள் நிச்சயமாக கொண்டாடுவார்கள் என்று நம்பினேன், அது நடந்தது. அம்பேத்கர் புகைப்படத்தை படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல, எதையும் சொல்ல வேண்டிய முறையோடு சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். இது வெற்றிச் சந்திப்பு அல்ல, நன்றி அறிவிப்பு மட்டும் தான். ஏனெனில் இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் பெரிதாக கொண்டாடினார்கள். ஒருமுறை எழுதியதோடு நிறுத்திவிடாமல் இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன் இது போன்ற படங்களை தயாரிக்கும்” என்றார்.

இயக்குனர் ராம் பேசுகையில், “இந்த படத்தின் வணிக  ரீதியான வெற்றி, தமிழ்மக்கள் சாதிபேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட்சி. பா.இரஞ்சித் படங்கள் வருவதற்கு முன்பும் தலித் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இரஞ்சித் வந்தபிறகு தான், தலித் பற்றி மேடையில் பேசியே ஆக வேண்டும் என்ற நிலை வந்தது. எனக்கும் மாரி செல்வராஜுக்குமான உறவு தந்தை மகனுக்குமான உறவு என்று பலரும் சொன்னார்கள். ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. ஒரு தந்தை தன் பையனை அழைத்து நடந்து வருகிறார். மகன் ‘நிலா அருகே போவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும்’ என்று கேட்டான். ‘இப்படியே நடந்தால் நூறு  வருடங்கள்  ஆகும்’ என்றார் தந்தை. இருவரும் நடந்து வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் விளக்கு எரிந்தது. அந்த விளக்கு அருகே நிலாவும் நட்சத்திரமும் இருந்தன. அப்போது மகன் சொன்னான், ‘இதோ நிலாவிற்கு அருகே வந்துவிட்டோம்’ என்று. அதுபோல்தான் மாரி செல்வராஜ் என்னிடம் வரும்போது, நான் அவனிடம் ‘ ஓடு… படி…எழுது… இது போதாது’ என்று விரட்டிக்கொண்டே இருப்பேன். பனிரெண்டு வருடம் கழித்து இதோ அவன் நிலாவாக மாறிவிட்டான். எங்கள் வீட்டு நிலாவை நீங்கள் கொண்டாடுவதில் உள்ளபடியே மகிழ்ச்சி” என்றார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, “பரியேறும் பெருமாளை  எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்று மிகவும் பயந்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாக, பத்திரிகையாளர்கள் அனைவரும் பாராட்டியது மறக்க முடியாதது. அத்தனை பேருக்கும் நன்றி. எல்லோரும் முதல் படத்திலேயே இப்படியான காட்சிகளை எடுக்க முடிந்தது எப்படி என கேட்டார்கள். எல்லாமே இரஞ்சித் அண்ணா என்கிற ஒருவர் கொடுத்த நம்பிக்கை தான் காரணம். அதற்கெல்லாம் அவருக்கு நன்றி கூறப்போவதில்லை, கடைசி வரை அவர் கூடவே தான் இருப்பேன். என்னுடைய உதவி இயக்குநர்கள், தயாரிப்பு தரப்பினர், கேமராமேன், எடிட்டர் எல்லோருக்குமே எனது நன்றிகள். சந்தோஷ் நாராயணன் சார் இந்தப் படத்தை முழுவதுமாக புரிந்துகொண்டு வேலை செய்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு எல்லோரும் படத்திற்காக முழுமையாக உழைத்தார்கள், அவர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள், நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் அத்தனை பேரும் பாராட்டினார்கள். பரியனின் அப்பாவாக நடிக்க சரியான நபரை தேர்வு செய்ய அலைந்து திரிந்தோம். தமிழ்நாடு முழுக்க சுற்றினோம். அதன் பின்னர் நிஜத்திலேயே கூத்துக் கலைஞரான தங்கராஜை  பிடித்தோம். அவரை ஒரு சோளக் கொல்லையில்  நடு இரவில் சந்தித்தேன். முதலில் ஒரு ஒப்பாரி பாடலை பாட சொன்னேன். அரைமணி நேரம் அவர் பாடியது உருக வைத்தது. உடனே அவரை தேர்ந்தெடுத்தோம். படத்தில் உள்ளதற்கும், நிஜத்திற்கும் நிறைய வேறுபாடு கொண்டவர் அவர். நிஜத்தில் பயங்கரமாக கோபப்படக்கூடிய ஒரு ஆள். முக்கியமான  அந்த காட்சியில் அழ முடியாது என மறுத்தார். ஆனால் நான் அழுது காண்பித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார். நிர்வாணமாக ஓடும் காட்சியில் நடிக்க முதலில் மறுத்தார். முழுக் கதையையும் விளக்கிய பின்னர்  ஒப்புக்கொண்டார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் படம் பார்க்கும்வரை எனக்கு பதற்றம் இருக்கும்” என்றார்.

p1

 

Read previous post:
0a1a
மதுரைக்காரர் கெட்டப்பில் ரஜினி: ‘பேட்ட’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2 பாயிண்ட் ஓ’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடித்து முடித்தபின் ரஜினி சன் பிக்சர்ஸ் கலாநிதி

Close