“சசிகலா புஷ்பா புகாருக்கு ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்!” – மு.க.ஸ்டாலின்

“அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் வெளிப்படையாக தெரிவித்த புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தீரன் சின்னமலை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஈரோடு செல்வதற்காக, சென்னை விமான நிலையம் வந்த தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினிடம், “அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பா தன்னை முதல்வர் ஜெயலலிதா தாக்கியதாகவும், எம்.பி. பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்துவதாகவும் குறிப்பிட்டு, எனவே தனக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து இருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?” என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “தனக்கு பாதுகாப்பு இல்லை என சொன்னது அதிமுகவின் எம்.பி. அதை சொன்ன இடம் நடுரோட்டிலோ, முச்சந்தியிலோ நின்று அவர் சொல்லவில்லை, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறிப்பாக யார் மீது புகார் தெரிவித்து இருக்கிறார் என்றால், தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் ஜெயலலிதா தனது கன்னத்தில் அறைந்தார் என்று வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

“இதில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கக்கூடியவர் முதலமைச்சர் ஜெயலலிதா. எனவே அவர்தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும். ஆகவே, செய்தியாளர்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதா இருக்கக்கூடிய போயஸ் தோட்டத்திற்கு சென்று, இது குறித்த அவரது விளக்கங்களை கேட்டு, உண்மையை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.