“ஜெயலலிதா என் கன்னத்தில் அறைந்தார்”: மாநிலங்கள் அவையில் சசிகலா புஷ்பா புகார்!

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா தம்மை கன்னத்தில் அறைந்ததாக, அக்கட்சியின் எம்.பி. சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் திடுக்கிடும் புகார் தெரிவித்தார். இப்புகார் தெரிவித்த அடுத்த நிமிடமே அவர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று (திங்கள்கிழமை) காலை மாநிலங்களவை கூட்டம் கூடியதும், அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா பேசுவதற்கு அனுமதி கோரினார்.

அவை துணைத் தலைவர் குரியன் அனுமதி அளித்தார். இதனையடுத்து அவையில் பேசிய சசிகலா புஷ்பா, “சமூக வலைத்தளங்களில் இரண்டு நாட்களாக சில விஷயங்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இரண்டு எம்.பி.க்களின் உரிமை சார்ந்த விஷயம் என்பதால் அது குறித்து இந்த அவையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அன்று நடந்த சம்பவம் நான் உணர்ச்சிவசப்பட்டதின் விளைவு. எனது கட்சித் தலைமையின் மீதுள்ள மரியாதையின் நிமித்தம் நான் அவ்வாறு செய்துவிட்டேன். எனது தவறுக்காக திருச்சி சிவாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன். திமுக உறுப்பினர்களிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டேன்.

ஆனால், இப்போது எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனது பதவியை நான் ராஜினாமா செய்யுமாறு எனது கட்சித் தலைமையால் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன்.

எனது கட்சித் தலைமை மீது எனக்கு நன்றி உணர்வு இருக்கிறது. என்னை எம்.பி.யாக்கியதற்காக இந்தத் தருணத்திலும் நான் அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஆனால், நான் என் பதவியை நிச்சயம் ராஜினாமா செய்ய மாட்டேன். இந்த நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எங்கே இருக்கிறது?

இந்த அவையை விடுத்து நான் எனது பாதுகாப்புக்கு எங்கு செல்ல முடியும். நேற்று அவர் (ஜெயலலிதா) என்னை கன்னத்தில் அறைந்தார். அவர் என்னை துன்புறுத்தினார். என்னை மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை இங்கே அழைத்து வந்தார். எனது கணவரையும், குடும்பத்தாரையும் சந்திக்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுதான் இந்நாட்டில் நிலவும் பெண்களுக்கான பாதுகாப்பா?” என்றார்.

சசிகலா புஷ்பா இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது அவர் தொடர்ந்து அவையில் பேச முடியாத அளவுக்கு அமளி நீடித்தது. இதனால் அவரால் மேலும் பேச முடியாமல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.

ஜெயலலிதா தன்னை அறைந்ததாக சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் பேசிக் கொண்டிருந்த வேளையிலேயே அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இதற்கான உத்தரவை பிறப்பித்தார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவர் நீக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவை சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து சசிகலா புஷ்பாவை கட்சி மேலிடம் அழைத்து விசாரணை நடத்தியது. இதேபோல், திருச்சி சிவாவுடன் திமுக தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.