சசிகலா புஷ்பா எம்.பி. அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்: ஜெயலலிதா உத்தரவு

மாநிலங்களவை அதிமுக எம்.பி.யாக 2014-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா புஷ்பா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர்.

குடிபோதையில் அதிமுக நிர்வாகி ஒருவருடன் ஆபாசமாக சசிகலா புஷ்பா பேசிய ஆடியோ ஒன்று சில மாதங்களுக்குமுன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அவர் மீது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பின்னர், திமுகவின் மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவாவுடன் சசிகலா புஷ்பா மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அப்போதும் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை டில்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கும், அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. அப்போது சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவை அறைந்தார். “திருச்சி சிவாவின் கன்னத்தில் 4 முறை அறைந்தேன்” என்று சசிகலா புஷ்பாவே பெருமை பொங்க பேட்டியளித்தார். இது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு வருமாறு ஜெயலலிதா நேற்று சசிகலா புஷ்பாவுக்கு சம்மன் அனுப்பினார். அதன்பேரில் போயஸ்கார்டனுக்குச் சென்ற சசிகலா புஷ்பாவை கடுமையாக கண்டித்த ஜெயலலிதா, எம்.பி. பதவியை உடனடியாக ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டார்.

ஆனால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யாத சசிகலா புஷ்பா, இன்று மாநிலங்களைவையில் ஜெயலலிதாவை குறை கூறி பேசினார். தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கண்ணீர் மல்க கூறிய சசிகலா புஷ்பா, “எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

“எம்.பி. என்ற முறையில் உங்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படும்” என்று மாநிலங்களவை துணை தலைவர் குரியன் தெரிவித்தார். இதற்கிடையில் சசிகலா புஷ்பாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

தனது கட்டளைப்படி எம்.பி. பதவியை சசிகலா புஷ்பா ராஜினாமா செய்யாமல், மாநிலங்களவையில் தனக்கு எதிராக வசனம் பேசிக்கொண்டிருந்ததால் கடுப்பான ஜெயலலிதா, அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலா புஷ்பாவை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.