ஓ.பன்னீர்செல்வம் – மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு: ஜெயலலிதாவுக்கு தெரியுமா?

தமிழகத்தின் எந்த பிரச்சனையாக இருந்தாலும், அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசுவது, அவர்களுடன் கலந்தாலோசிப்பது போன்ற ஜனநாயகப் பண்புகள் எதையும் கடைப்பிடிக்கும் வழக்கம் இல்லாதவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.

அவர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், அவருடைய இலாகாக்கள் அனைத்தும் தற்போது நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அறிவிக்கப்படாத முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை, தி.மு.க. பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திடீரென சந்தித்துப் பேசினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மு.க.ஸ்டாலினுடன் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், எம்எல்ஏக்கள் பொன்முடி, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் வந்திருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “நேற்றைய தினம் (வியாழக்கிழமை) தமிழகத்தை சேர்ந்த பல்வேறு விவசாய அமைப்புகளை அழைத்து காவிரி விவகாரம் குறித்து ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தி, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், இன்று நிதியமைச்சர் அவர்களை சந்தித்து, அந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க நிர்வாகிகளின் கையெழுத்துகள் அடங்கிய தீர்மானத்தின் நகலை வழங்கினேன்.

முதலாவதாக, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இரண்டாவதாக, தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும். மூன்றாவதாக, தமிழகத்தில் இருக்க கூடிய அனைத்துக் கட்சி தலைவர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் என அத்தனை பேரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து, அவர்களுக்கு அழுத்தம் தர வேண்டும் என்கிற மூன்று விஷ்யங்களை வலியுறுத்தி, நேற்றைக்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிதியமைச்சரிடத்திலே வழங்கியிருக்கிறோம்.

நிதியமைச்சர் மட்டுமல்ல, பொதுப்பணித்துறை அமைச்சரிடத்திலும், தலைமை செயலாளரிடத்திலும் தீர்மானங்களின் நகலை வழங்கியிருகிறோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக நிதி அமைச்சரும், பொதுப்பணித்துறை அமைச்சரும் எங்களிடத்தில் உறுதிமொழி அளித்திருக்கிறார்கள்.

தலைமை செயலாளரை பார்க்கவில்லை. தீர்மானங்களில் நகலை தலைமை செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்றார்.

அதெல்லாம் இருக்கட்டும், எதிர்க்கட்சித் தலைவர்களை எந்த காரணத்துக்காகவும் சந்திக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,  ஓ.பன்னீர்செல்வம் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு இன்று நிகழ்ந்தது தெரியுமா? ஜெயலலிதாவின் அனுமதியுடன் தான் ஓ.பன்னீர்செல்வம் மு.க.ஸ்டாலினை சந்தித்தாரா? மருத்துவமனையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு இது தெரியாது என்றால், இது என்றைக்காகவது ஒருநாள் ஜெயலலிதாவுக்கு தெரிய வரும்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் கதி என்னாகும்? என கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Read previous post:
0a
இந்துத்துவா எனும் ‘ஆக்டோபஸ்’ ஈழத்திலும் ஊடுருவல்!

செய்தி: “இலங்கையில் வாழும் இந்துக்களை பாதுகாக்கவே சிவசேனா அமைப்பை தொடங்கினேன்.” - மறவன் புலவு சச்சிதானந்தம் முப்பதாண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் இலங்கையரசால் குண்டு வீசி அழிக்கப்பட்ட

Close