இந்துத்துவா எனும் ‘ஆக்டோபஸ்’ ஈழத்திலும் ஊடுருவல்!

செய்தி:

“இலங்கையில் வாழும் இந்துக்களை பாதுகாக்கவே சிவசேனா அமைப்பை தொடங்கினேன்.”

– மறவன் புலவு சச்சிதானந்தம்

முப்பதாண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் இலங்கையரசால் குண்டு வீசி அழிக்கப்பட்ட இந்துக் கோவில்கள் நூற்றுக்கணக்கானவை. கொல்லப்பட்ட இந்துக்கள் ஆயிரக்கணக்கானவர்கள். பல்லாயிரம் பசுமாடுகள் கூட கொல்லப்பட்டன.

இத்தனைக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கு போய் வந்து கொண்டிருந்தார்கள். திருப்பதியில் விசேட தரிசனம் வேறு. .இடிக்கப்பட்ட கோவில்களுக்காகவோ, கொல்லப்பட்ட இந்துக்களுக்காகவோ, ஏன்… ஈழத்தில் கொல்லப்பட்ட பசுமாடுகளுக்காகக் கூட குரல் கொடுக்காத சிவசேனா அமைப்பு, இந்தியா சென்றுவந்த இலங்கை ஆட்சியாளர்களுக்குக் கூட இதுவரை காலமும் ஒரு எதிர்ப்பை காட்டவில்லை..

அது மட்டுமல்ல, சிவசேனா மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவோடு பாரதிய ஜனதா 1998 முதல் 2004 வரை இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் தான் புலிகளின் பெருமளவான ஆயுதக் கப்பல்கள் இந்திய அரசின் உதவியோடு இலங்கை அரசால் மூழ்கடிக்கப்பட்டது வரலாறு.

வரலாறு இப்படியிருக்க, இனி புதிதாய் இலங்கையில் வாழும் இந்துக்களை எப்படி பாதுகாக்கப் போகிறார்கள்…?

2009ஆம் ஆண்டு ஈழத்தில் நடந்து முடிந்த தமிழர்களின் படுகொலைக்கு தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளும், ஈழத்தை ஆதரிக்காத இடதுசாரிகளும், சாதாரண மக்களும் போராடிக்கொண்டிருக்கும்போது, இந்த இந்துத்துவா அமைப்புகள் கோவிலில் கொடுத்த உருண்டை களியை வாங்கி முழுங்கிவிட்டு குப்பபுற படுத்துக்கொண்டு இருந்தார்களா…?

இலங்கையில் எப்பொழுதும் இந்தியா மூக்கை நுழைத்துக் கொண்டிருப்பதற்காக ‘அனுமான் கோவில்’, ‘அம்பேத்கர் விழா’ என்ற வரிசையில் அடுத்தபடியாக நுழைந்திருப்பது தான் சிவசேனா. இதற்கு பலியாடுகளாக எம்மவர்களே கழுத்தில் மாலையும் போட்டு, உடம்பில் மசாலாவையும் தடவிக்கொண்டு போய் கழுத்தை நீட்டிக்கொண்டிருக்கிறார்கள்…

GOWRIPAL SATHIRI SRI