கவுசல்யாவின் தந்தை வாக்குமூலம்: மருத்துவர் ராமதாசுக்கு சமர்ப்பணம்!
சங்கருக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறதா சொல்லியும், அவன் என் பொண்ணை விட மறுத்துட்டான். என் பொண்ணும் என் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா. அதுக்கு அப்புறம்தான் ரெண்டு பேரையும் கொலை செய்ய முடிவு செஞ்சேன்” என போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி.
உடுமலையில் காதலித்து கலப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கர் – கெளசல்யா தம்பதியினர், கடந்த 13-ம் தேதியன்று பஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி வீழ்த்தப்பட்டனர். இதில் கணவர் சங்கர் பரிதாபமாக இறந்தார். கவுசல்யா படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனது தந்தை, தாய், மாமா தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என கவுசல்யா போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து 14-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை கைது செய்தனர் போலீசார்.
7 நாட்களுக்கு பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சின்னசாமியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தான்தான் இந்த கொலையை செய்யச் சொன்னதாக சின்னசாமி ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
“எனது மகள் கீழ் ஜாதியைச் சேர்ந்த பையனை கல்யாணம் பண்ணிகிட்டது எனக்கு ரொம்ப அவமானமா போச்சு. என் பொண்ணு மேல எனக்கு ரொம்ப பாசம் ஜாஸ்தி. எப்படியாவது வந்துடுனு கெஞ்சி பாத்தேன். மிரட்டியும் பாத்தேன். கவுசல்யாவோட அம்மாவ விட்டு கூட மிரட்டி பார்த்தேன். எதுவும் நடக்கலை. அந்த பையனுக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறேன். நீ வாங்கிட்டு போயிடு. என் பொண்ணை என்கிட்ட விட்டுடுனு சொன்னேன். அவனும் கேக்கலை. ரெண்டு பேரும் பிடிவாதமா இருந்தாங்க.
இன்னொரு பக்கம் எனக்கு என் சொந்த பந்தங்க கிட்ட ரொம்ப கேவலமா போச்சு. எங்கே போனாலும் என்னை அவமானப்படுத்துனாங்க. அதனாலதான் இந்த முடிவுக்கு வந்தேன். ஜெகதீசன்கிட்ட இதைப்பத்தி சொன்னேன். என் பொண்ணை கூப்பிட்டு வா. வரலைனு சொன்னா அவளையும் கொன்னுடுனு சொன்னேன்.” என சின்னசாமி கூறியதாக விவரிக்கின்றனர் போலீசார்.
இதற்கிடையே பல்லடம் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜரான கவுசல்யா, நடந்தவை குறித்து ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதால் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் கவுசல்யாவின் தாயார், மாமா உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேற்கூறிய திருமணங்களை “நாடக காதல்” என்றும், “பணம் பறிக்கும் முயற்சி” என்றும் சில சாதி அமைப்புகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பல லட்சம் பணம் கொடுப்பதாக சொல்லியும், சங்கர் மறுத்ததாக கவுசல்யாவின் தந்தை அளித்துள்ள வாக்குமூலம் முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.
– ச.ஜெ.ரவி
Courtesy: vikatan.com