கலாபவன் மணி மர்ம மரணம்: பூச்சிக்கொல்லி மருந்து வாங்கியவர் மாமனார்!

நடிகர் கலாபவன்மணி மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அவரது உடலில் பூச்சிக்கொல்லி மருந்து உள்பட 3 வகையான ரசாயன பொருட்கள் கலந்ததால் கல்லீரல் பாதிக்கப்பட்டு அவர் மரணமடைந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்து உள்ளது. இதனால் கலாபவன் மணி விஷம் குடித்து தற்கொலை செய்தாரா? அல்லது விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா? என்பதை கண்டுபிடிக்க கேரள போலீஸ் ஐ.ஜி. அஜீத்குமார் உத்தரவுப்படி 6 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கலாபவன் மணியின் உதவியாளர்கள், அவரது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் பங்கேற்றவர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கலாபவன் மணியின் மாமனார் சுதாகரன், பூச்சிக்கொல்லி மருந்து வாங்கியதை போலீசார் உறுதி செய்துள்ளனர். சுதாகரன் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கியதை கடைக்காரர் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத் தகராறு அல்லது குடும்பச் சொத்துப் பிரச்சனை காரணமாக மணி கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதால், இது குறித்து மணியின் மாமனார் சுதாகரனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.