சூப்பர் சிங்கரில் அடுத்து யேசுதாஸ், எஸ்.பி.பி, மனோ போட்டியிட வாய்ப்பு?

திறமையுள்ள புதிய பாடகர்களைக் கண்டறிந்து, அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவதுதான் நோக்கம் என கூறிக்கொண்டு, “செல்லக் குரலுக்கான தேடல்”, “தமிழகத்தில் பிரமாண்ட குரல் தேடல்” என்றெல்லாம் முழங்கிக்கொண்டு ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி நடத்திவரும் விஜய் டிவி, இதற்கு மாறாக, ஏற்கெனவே பல படங்களுக்கு பின்னணி பாடல்கள் பாடியுள்ள ஆனந்த் அரவிந்தாகக்ஷனை சூப்பர் சிங்கராக தேர்வு செய்து முதல் பரிசு வழங்கி மோசடி செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை டி.பி.ஜெயின் கல்லூரி வளாகத்தில் கடந்த 18ஆம் தேதி இரவு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 5ன் இறுதிச்சுற்று போட்டி நடைபெற்றது. இதில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த் அரவிந்தாக்ஷன், லட்சுமி ஆகிய ஐந்து பேர் போட்டியிட்டார்கள். இவர்களில் பரீதா, ராஜகணபதி ஆகிய இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனந்த் அரவிந்தாக்ஷன், சியாத், லட்சுமி ஆகிய மூவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

இறுதிச்சுற்றில் போட்டியாளர்கள் பாடிய பாடல்களில் ராஜ கணபதி பாடிய ‘ஆலுமா டோலுமா’ பாடலுக்கு ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. மேடைக்கே வந்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார் பிரபல பாடகி உஷா உதுப்.

5 போட்டியாளர்களும் பாடி முடித்த பின்னர் ரிசல்ட் அறிவிக்கும் நேரம் வந்தது. லட்சுமியும், சியாத்தும் 4 மற்றும் 5ம் இடத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்புள்ள செக் பரிசாக வழங்கப்பட்டது.

அடுத்து, தொகுப்பாளினி பாவனா சற்றே குழப்பமான முடிவினையே அறிவித்தார். நடுவர்கள் அளித்த 746 மதிப்பெண்களைப் பெற்று தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜகணபதி முதலிடம் பிடித்ததாக கூறினார். அதேநேரத்தில் வாக்குகள் அடிப்படையில் வித்தியாசம் இருப்பதாக கூறினார். முதலிடம் என்று கூறிய உடனேயே ராஜ கணபதியின் பெற்றோர்களும், ரசிகர்களும் உற்சாக ஆரவாரம் செய்தனர். ஆனால் ஒட்டு மொத்தமாக ராஜகணபதிக்கு மூன்றாம் இடம் என்று கூறி பரிசு அளிக்கப்பட்டது. இதனால் அவரது பெற்றோர்கள் மட்டுமல்லாது தமிழக ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பரிதாவும், கேரளாவைச் சேர்ந்த ஆனந்த் அரவிந்தாக்ஷனும் மேடையில் நிற்க, இவர்களில் யாருக்கு முதல் பரிசு என்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்தனர். பலவித பில்டப்புகளுக்கு பிறகு, முதலிடம் பிடித்து வெற்றி பெற்றவர் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்று அறிவித்தார் பாவனா. ஆனந்த் அரவிந்தாக்ஷனுக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான வீட்டிற்கான சாவியை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அளித்தார்.

இரண்டாம் இடம் பிடித்த பரிதாவிற்கு ரூ. 10 லட்சம் மதிப்புள்ள செக் பரிசளிக்கப்பட்டது.

இதன்பின்னர் தான் விஜய் டிவியின் தேர்வுத் தில்லுமுல்லு பற்றிய தகவல் வெளியாகி, பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முதல் பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்ட ஆனந்த் அரவிந்தாக்ஷன் புதிய பாடகரல்ல, அவர் ஏற்கெனவே பல படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ள திரைப்பட பின்னணி பாடகர் என்ற அதிர்ச்சித் தகவல் தான் அது.

ஆரோகணம், நீர் பறவை, 10 எண்றதுக்குள்ள, இவன் வேற மாதிரி, பாண்டிய நாடு, மதயானைக் கூட்டம் உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார் ஆனந்த் அரவிந்தாக்ஷன்.

திரைப்பட பின்னணி பாடகர் ஒருவரை போட்டியாளராக கொண்டு வந்தது மட்டுமல்ல, அவரை பாதியில் எலிமினேட் செய்து, பின்னர் ஒய்ல்டுகார்டு ரவுண்டு என்ற பெயரில் மீண்டும் உள்ளே கொண்டுவந்து, முதல் பரிசுக்கு தேர்வு செய்து, உலகெங்கும் உள்ள ரசிகர்களை, பார்வையாளர்களை முட்டாள் ஆக்கியிருக்கிறது விஜய் டிவி.

இதனால் கொதிப்படைந்திருக்கும் ரசிகர்கள் “சூப்பர் சிங்கரில் அடுத்து பிரபல பின்னணி பாடகர்களான கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோ போன்றவர்களை போட்டியாளர்களாக விஜய் டிவி கொண்டுவந்து, ‘புதிய பாடகர்’களாக உலகுக்கு அறிவித்தாலும் அறிவிக்கும்” என்கிற ரீதியில் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு, காறித்துப்பி வருகிறார்கள்.