நிகழ்கால அரசியலை உச்சகட்ட பகடி செய்யும் உன்னத சினிமா!
வேறு மொழிகளில் எடுக்கப்பட்டிருந்தால் இந்த படம் பயங்கரமாய் கொண்டாடப்பட்டிருக்குமோ என்று சில படங்களைப் பார்த்தால் தோன்றும். அப்படியொரு படம் இந்த ‘விடுமுறை நாள் விளையாட்டு’ (ஒழிவு திவசத்தே களி’). What a film!
கதை என்பதல்ல சினிமா என்பதை ஊர்ஜிதப்படுத்தும் இன்னொரு படைப்பு. நேரடியாக, ராவாக, இயல்பாக, யதார்த்தமாக சொல்லப்பட்ட கலை.
ஜந்து நண்பர்கள் ஒரு விடுமுறை நாளை கழிக்க ஒரு சிறிய பங்களாவிற்கு செல்கிறார்கள். அங்கு நடக்கும் ரகளை, விவாதம், சமையல்காரி, போதையில் தலைதூக்கும் காமம் இதுதான் முக்கால்வாசி திரைப்படம். இடையே மிக மெலிதாக சாதி, அரசியல் குறித்த பார்வைகள். இறுதியாக எல்லாம் ஓய்ந்தபின் ஒரு பழைய விளையாட்டு விளையாடுகிறார்கள். ஒருவர் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ். ராஜா மந்திரி, போலீஸ், திருடன் என எழுதப்பட்ட நான்கு சீட்டுகள். ஆளுக்கு ஒரு சீட்டை எடுக்க வேண்டும். போலீஸ் சீட்டை எடுத்திருப்பவர் மட்டும், தான் போலீஸ் என்பதை அறிவித்துவிட்டு திருடன் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தவறாக கண்டுபிடித்தால் போலீஸுக்கு தண்டனை. சரியாக கண்டுபிடித்தால் திருடனுக்குத் தண்டனை. வழங்குபவர் ஜட்ஜ்.
இதுதான் படத்தின் உச்சம். இந்த விளையாட்டினுள் சொல்லப்பட்டிருக்கும் அரசியல் சமகால திரைப்படங்களில் நான் கண்டிராதது. யார் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ், யார் போலீஸ், யார் ராஜா, யார் மந்திரி என்பதில் தொடங்கி, தவறாக கண்டுபிடித்த போலீசுக்கு என்ன தண்டனை, அதை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதுவரை நிகழ்கால அரசியலின் உச்சகட்ட பகடி. இறுதியில் யார் திருடன், அவனுக்கு மற்றவர்களால் வழங்கப்படும் தண்டனை என்ன என்பது நெஞ்சை உலுக்கும் முடிவு. இந்த காட்சியோடு இணைந்த முன்பாதிக் காட்சிகளும், பின்பாதி வசனங்களும் எத்தனை பெரிய அரசியலை எத்தனை எளிமையாக காட்டிவிடுகின்றன?
இதுவரையில் இந்திய திரையில் இப்படியொரு யதார்த்தமான நடிப்பை நான் எந்த படத்திலும் பார்த்ததில்லை. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் முன்னால் கேமிராவே இல்லாததுபோல் இயங்குவதை முதன்முறை இந்திய சினிமாவில் பார்க்கிறேன் (மிகையில்லை). படத்தில் மொத்தம் எழுபதே ஷாட்கள் தான். அதிலும் இடைவேளைக்கு பிறகு கிட்டத்தட்ட 50 நிமிடம் ஒரே ஷாட்தான். இது படம் முடிந்த பிறகு சந்தேகத்தில் நண்பரை கேட்கும் வரை மண்டைக்குள் உறைக்கவில்லை. இதுதான் படத்தின் ஆகச்சிறந்த வெற்றி.
இத்தனை சிறிய பட்ஜெட்டில் (20 லட்சம்) இத்தகைய மெனக்கிடலோடு, பரீட்சார்த்தமாக அதே சமயம் வலுவான அரசியல் பார்வையோடு இப்படத்தை உருவாக்கியிருக்கும் குழுவுக்கு ஒரு பெரிய சல்யூட்.
விருதுகளைத் தாண்டி இந்த படம் பார்த்து கொண்டாடப்பட வேண்டிய படம். எஸ்கேப் தியேட்டரில் இரவு 10.05 காட்சி மட்டும் ஓடுகிறது. அதுவும் இன்றும் நாளையும்தான். நிறையபேர் வேண்டுகோள் வைத்தால் நீட்டிக்கப்படலாம். ஆனால் இன்றே பாதி தியேட்டர்தான் இருந்தது. முடிந்தவரை தியேட்டரில் பார்த்து விடுங்கள். இந்த விஷயத்தில் டாரண்ட் உதவுமா என்று தெரியவில்லை. படத்தில் ட்ரைலரில் ‘An Experience like never before’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். நிச்சயம் இது இதற்கு முன் கண்டிராத ஒரு அனுபவம்தான்!!!
– ஜெயச்சந்திர ஹஷ்மி