“இது தேர்தல் அறிக்கை மட்டும் அல்ல, காங்கிரஸின் மக்கள் சாசனம்!”

இது தேர்தல் அறிக்கை மட்டும் அல்ல, காங்கிரஸின் மக்கள் சாசனம்.

தேர்தல் அறிக்கை என்பது சமூக நீதி, வளர்ச்சி, மேம்பாடு, நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்க வேண்டும். இயல்பானதாகவும் நம்பகத் தன்மையானதாகவும் நடைமுறைப்படுத்தக் கூடியதாகவும் இருக்குமானால் மக்களுக்கு அந்த அறிக்கை மீது நம்பிக்கை ஏற்படும். அந்த நம்பிக்கையை காங்கிரஸ் முழுமையாக பெற்று விட்டது என்று சொல்வேன்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கடந்த 5 ஆண்டு கால வலிகளை நீக்கக் கூடியதாகவும் அடுத்த 50 ஆண்டு கால வளர்ச்சியை நோக்கி செல்லக் கூடியதாகவும் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வாசித்தபோது அந்த கட்சி தன்னை சுயபரிசோதனை செய்து கொண்டதாகவே உணர்கிறேன். கடந்த ஆண்டுகளில் தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்து எச்சரிக்கை உணர்வோடு பயணம் செய்ய வேண்டும் என்கிற சீராய்வினை செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

சர்வதேசிய சிவில் சமூகம் விரும்பக்கூடிய, அதே நேரத்தில் எளிய மக்கள் ஏற்றுக் கொள்ள கூடிய அளவில் தேர்தல் அறிக்கை இருக்கிறது. நீட் தேர்வு ரத்து, விவசாயக் கடன்கள் ரத்து, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, ஏழை எளிய மக்களுக்கு வருடத்திற்கு 72 ஆயிரம் வைப்பு நிதி, ஜிஎஸ்டியில் மாற்றம், பெண்களுக்கு வேலை வாய்ப்பில் 33 சதவீதம் இடஒதுக்கீடு என்று பிரச்சனையை உள்வாங்கி இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

அதுமட்டுமல்ல… வேலை, தொழில், கட்டமைப்பு, கிராமப்புற மேம்பாடு, விவசாயம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு, பஞ்சாயத்து அதிகாரம், பெண்கள் வளர்ச்சி, காவல்துறையில் சீர்திருத்தம், சட்டத் துறையில் சீர்திருத்தம், உணவு, விளையாட்டு, கல்வி, மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நீர் மேலாண்மை என்று 52 பகுதியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

சமூக அக்கறையும் தனிமனித வலியை உணர்ந்து கொள்ளும் பக்குவமும் தேர்தல் அறிக்கையில் தென்படுகிறது. சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு கவனத்தை கொடுக்க வேண்டுமென்கிற முனைப்பு தேர்தல் அறிக்கையில் மிகுதியாக காணப்படுகிறது.

ஆண்டாண்டு காலம் அச்சுறுத்தி வந்த ஜம்மு காஷ்மிர் பிரச்சனை, வடகிழக்கு மாகாண மக்களை அச்சுறுத்தும் ராணுவ சிறப்பு சட்டங்கள் ரத்து போன்றவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பது நீண்ட கால பிரச்சனைகளுக்கான தீர்வை நோக்கி செல்வதாக இந்த அறிக்கை அமைந்திருக்கிறது.

புறக்கணிக்கப்பட்ட மக்கள், மாநில பிரச்சனைகள், பிராந்திய பிரச்சனைகள், ஒட்டுமொத்த மக்களின் பிரச்சனைகள் என்று பிரச்சனைகளை ஒருபக்கம் அடுக்கிக் கொண்டு, அவற்றிற்கு தீர்வு கிடைப்பதற்கு என்ன மாதிரியான செயல்திட்டங்களை கொண்டு வரலாம் என்கிற விவரிப்பு இந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது.

இளைஞனின் கனவும் பெரியோரின் அனுபவமும் ஒருங்கே அமைந்த அறிக்கை என்று இவற்றை நான் சொல்வேன். இது தேர்தல் அறிக்கை என்பதை விட காங்கிரஸின் மக்கள் சாசனம் என்பேன். இந்த அறிக்கையினை காங்கிரஸ் கட்சி பல்வேறு திறன் வாய்ந்த நிபுணத்துவம் உள்ள ஆட்களோடு கலந்து பேசி தயாரித்திருக்கிறது.

பொய் வாக்குறுதிகள், மதத்தை, சாதியத்தை தூண்டுகிற திட்டங்கள் என்று எதுவும் இந்த தேர்தல் அறிக்கையில் இல்லை. ஒருவேளை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்தால் இந்த மக்கள் சாசனத்தை செயல்படுத்தக்கூடிய, ஆலோசிக்கக்கூடிய ஒரு கமிட்டியை நியமனம் செய்து நடைமுறைப்படுத்தினால் மிக எளிதாக இந்த திட்டங்கள் மக்களை சென்றடையும்.

சர்வதேசிய அளவில் நடந்து கொண்டிருக்கக்கூடிய மனித வள மேம்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றை கவனித்து அவற்றை இந்திய சூழலுக்கு ஏற்றாற் போல் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள்.

– எவிடன்ஸ் கதிர்

Read previous post:
0a1b
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்”: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இருந்து

Close