வெற்றிமாறனின் ‘விசாரணை’ படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு!
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விசாரணை’, ‘சிறந்த வெளிநாட்டு மொழி’ திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை பெறும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் ‘விசாரணை’. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டது.
பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் 3 தேசிய விருதுகளையும் கைப்பற்றியுள்ளது. சிறந்த தமிழ் படம், சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த உறுதுணை நடிகர் என 3 தேசிய விருதுகளை இப்படம் கைப்பற்றியது.
இந்த ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு, இந்தியாவில் இருந்து ‘விசாரணை’ தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டு இருக்கிறது.
இப்படத்தை ஆஸ்கர் விருதுகள் குழுவில் பல்வேறு வகையில் விளம்பரப்படுத்தி வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். ஆஸ்கருக்கு செல்லும் படங்கள் விருதை வெல்வதற்கு, தேவைப்படும் செயல்முறைகளுக்கான செலவுத் தொகைக்காக இந்திய அரசின் சார்பாக சுமார் 1 கோடி ரூபாய் அறிவித்திருக்கிறது. இதனைப் பெறுவதற்காக ‘விசாரணை’ படக்குழு முயற்சித்து வருகிறது.
இயக்குநர் வெற்றிமாறன் “இங்கு பல படங்களுக்கு ஹாலிவுட் ஸ்டூடியோக்களும், சர்வதேச அளவில் விநியோகஸ்தர்களும் பணம் செலவழிக்கின்றனர். இந்த சூழலில் இந்திய அரசாங்கத்திடமிருந்து பண உதவி கிடைப்பது இங்கிருக்கும் மற்ற படங்களுக்கு இணையாக பெருமையுடன் தலை தூக்கி நிற்க எங்களுக்கு உதவுகிறது” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஹாலிவுட் ரிப்போர்ட்டர் என்ற இணையதளம், ஆஸ்கர் விருதுகள் கிடைக்க வாய்ப்பு என்ற பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படம்’ பட்டியலில் ‘விசாரணை’ படத்துக்கு விருது கிடைக்க சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
பல்வேறு கட்டங்களைத் தாண்டி ‘விசாரணை’ படத்துக்கு விருது கிடைக்குமாயின், இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருது பெறும் முதல் படமாக அமையும். அடுத்தாண்டு பிப்ரவரி 26-ம் தேதி ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இதற்கான வாக்கெடுப்பு ஜனவரி 5-ம் தேதி முதல் துவங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.