“அவமானப் படுத்துகிறார்கள்”: ட்விட்டர், ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறினார் லட்சுமி ராமகிருஷ்ணன்!

லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ் சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்துடன் விளங்கி வருகிறார். இது மட்டுமில்லாமல், ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற தனியார் டிவி நிகழ்ச்சியின் மூலமும் இவர் பிரபலமானார்.

இவர் சமூக வலைத்தளங்களான டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில், தான் நடித்து வரும் படங்கள் மற்றும் தன்னுடைய படத்தின் புரோமோஷன்களையும், நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட செய்திகளையும் பதிவிட்டு வந்தார். ரசிகர்களுடனும் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டு வந்தார்.

இவரை சமூக வலைத்தளத்தில் நிறைய பேர் பின்தொடர்கிறார்கள். இந்நிலையில், டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் இவரது ‘சொல்வதெல்லாம் உண்மை’  நிகழ்ச்சியை கிண்டல் செய்து பலரும் பலவிதமான முறையில் பதிவிட்டு வருகின்றனர்.

இது லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. இந்நிலையில், இன்று முதல் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளத்தில் இருந்தும் தான் விலகப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

“இது வரை எனக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு நன்றி. மேலும், என்னை காயப்படுத்தியவர்களுக்கும், அவமானப்படுத்தியவர்களுக்கும் நன்றி” என்று கூறி விடை பெற்றுள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த முடிவுக்கு பலர் ஆட்சேபனை தெரிவித்திருந்தாலும், ஒரு சிலர் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.