அஞ்சலியுடன் 3-வது முறையாக ஜோடி சேர்ந்தது ஏன்?: விமல் விளக்கம்!

வரும் 11ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வருகிறது ‘மாப்ள சிங்கம்’.

ஏற்கெனவே ‘தூங்கா நகரம்’, ‘கலகலப்பு’ ஆகிய 2 படங்களில் ஜோடியாக நடித்த விமலும், அஞ்சலியும் 3-வது முறையாக ‘மாப்ள சிங்கம்’ படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். இவர்களுடன் சூரி, ராதாரவி, ஜெயப்பிரகாஷ், ‘லொள்ளு சபா’ சாமிநாதன், காளி வெங்கட், விஷ்ணு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் பி.மதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இயக்குனர் எழிலிடம் உதவியாளராக இருந்தவரும், எழில் இயக்கத்தில் விமல் நடித்த ‘தேசிங்கு’ படத்தின் வசனகர்த்தாவுமான ராஜசேகர், ‘மாப்ள சிங்கம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவர் இப்படத்தின் கதை பற்றி கூறுகையில், “விமலும், சூரியும் எதிரும்புதிருமான 2 அரசியல் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சட்டம் படித்து வழக்கறிஞராக இருப்பவர் அஞ்சலி. விமலும், அஞ்சலியும் ஒரு பொதுப் பிரச்சனைக்காக ஒன்று சேர்ந்து, அதில் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை அரசியல் பின்னணியில், காதல் கலந்த காமெடியாக சொல்லியிருக்கிறோம். படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

விமல் கூறுகையில், “மாப்ள சிங்கம்’ ஜனரஞ்சகமான கதையம்சம் கொண்ட படம். இதில் காதல், காமெடியோடு அரசியலும் இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பஞ்சாயத்து தலைவரின் மகனாக நடித்துள்ளேன்.

“நானும் சிவகார்த்திகேயனும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சேர்ந்து நடிப்பதற்கு முன்பிருந்தே நல்ல நண்பர்கள். அந்த நட்புணர்வு காரணமாக இந்த படத்தில் ஒரு பாட்டு பாடியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு என் நன்றி.

“எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும். வேறு எந்த மொழியும் தெரியாது. அஞ்சலி ஆந்திராவைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ் சரளமாக பேசுவார். அதனால் அவருடன் பேசிப் பழகுவது எளிதாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அஞ்சலி நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர். ஆகவே, அவருடன் 3-வது முறையாக சந்தோஷமாக இணைந்து நடித்திருக்கிறேன்” என்றார்.

‘அஞ்சலியா இவர்?’ என வியக்கும் அளவுக்கு உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக, அழகாக இருககிறார் அஞ்சலி. அது பற்றி அவர் கூறுகையில், “நான் நடித்த சில படங்களில் குண்டாக இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். ஆகவே உடல் எடையை குறைக்க முயற்சி செய்து வருகிறேன். இதுவரை 6 கிலோ எடையை குறைத்துவிட்டேன். இன்னும் குறைக்க வேண்டும்” என்றார்.

3-வது முறையாக விமலுக்கு ஜோடியாக நடித்திருப்பது பற்றி அஞ்சலி கூறுகையில், “விமல் எனக்கு நீண்டகால நண்பர். அவரை எனக்கு ரொம்ப நாட்களாக தெரியும். பழகுவதற்கு இனிமையானவர். படப்பிடிப்பில் ஒத்துழைப்பு கொடுத்து நடிப்பார். அவருடன் நடிப்பதற்கு சவுகரியமாக இருக்கும். என்னை புரிந்துகொண்ட கதாநாயகன் விமல். ஆகவே, அவருடன் 3-வது முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறேன்” என்றார்.

‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் கூறுகையில், “இந்த படத்தில் முழுநீள நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ராதாரவியை கொம்பு சீவிவிட்டு, குதிகுதியென குதிக்க வைத்து வேடிக்கை பார்க்கும் கதாபாத்திரம் என்னுடையது. காமெடி சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்.

இசையமைப்பாளர் ரகுநந்தன் கூறுகையில், “மாப்ள சிங்கம்’ படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவை அனைத்தும் நன்றாக வந்துள்ளன. நான் இசையமைக்கும் படங்களில் பாடல் வரிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் அது இருக்கும்” என்றார்.

பாடலாசிரியர் யுகபாரதி கூறுகையில், “இந்த படத்தின் ஒரு பாடலில் ஒரு புது முயற்சி மேற்கொண்டிருக்கிறோம். ‘கல்யாணத் தேனிலா… காய்ச்சாத பால் நிலா… ‘  என்ற பாடலில் எல்லா வரிகளும் ‘லா’ என்ற நெடில் எழுத்தில் முடிவதைப் போல, இதில் ஒரு பாடலில் எல்லா வரிகளும் ‘ல’ என்ற குறில் எழுத்தில் முடியும்படி எழுதியிருக்கிறேன். ட்யூனை அனுப்பி பாடல் எழுதச் சொல்பவராக இல்லாமல், கம்போசிங்கில் பாடலாசிரியரை கூடவே உட்கார வைத்து எழுத வைக்கும் இசையமைப்பாளராக ரகுநந்தன் இருப்பதால் தான் இந்த புது முயற்சி சாத்தியமானது” என்றார்.