மாயாவதி – அகிலேஷ் தொகுதி பங்கீடு: பட்டியல் வெளியீடு!

வரும் மக்களவைத் தேர்தலுக்காக உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்துள்ளன. இதில் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) 38, சமாஜ்வாதி 37 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இரு கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் தனித்தனியாக போட்டியிட்டன. இதில் சமாஜ்வாதி 23, காங்கிரஸ் 21, பகுஜன் சமாஜ் 20, பாஜக 10 தொகுதிகளைக் கைப்பற்றின.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலிலும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் தனித்தனியாக போட்டியிட்டன. நான்குமுனைப் போட்டியில் பாஜக 71 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் 2 தொகுதிகளைக் கைப்பற்றியது. சமாஜ்வாதிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ரேபரேலியில் சோனியா காந்தி, அமேதியில் ராகுல் காந்தி என காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

கடந்த 2017-ல் நடந்த உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று சமாஜ்வாதியிடம் இருந்து ஆட்சியைப் பறித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச்சில் உத்தர பிரதேசத்தின் கோரக்பூர், புல்பூர் மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் கோரக்பூர், முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்த தொகுதியாகும். புல்பூர், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ராஜினாமா செய்த தொகுதியாகும். இந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களுக்கு பகுஜன் சமாஜ் பகிரங்கமாக ஆதரவு அளித்தது. இதன் காரணமாக இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதி வெற்றிவாகை சூடியது. பாஜக தோல்வியைத் தழுவியது.

இந்தப் பின்னணியில் வரும் மக்களவைத் தேர்தலுக்காக சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் கடந்த மாதமே கூட்டணி அறிவிப்பை வெளியிட்டன. தொகுதிப் பங்கீடு குறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதில் உடன்பாடு எட்டப்பட்டு நேற்று தொகுதிப் பங்கீடு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சமாஜ்வாதிக்கு 37, பகுஜன் சமாஜுக்கு 38 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3 தொகுதிகள் அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளத்துக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. வழக்கம்போல ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியின் ரேபரேலி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக கருதப்படும் கோரக்பூர் தொகுதி சமாஜ்வாதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் கடுமையான பலப்பரீட்சை நடைபெறும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்தமுள்ள 80 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று ராகுல் காந்தி ஏற்கெனவே அறிவித்துள்ளார். இதனால் உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.