இளமி – விமர்சனம்

ஊருக்கு ஊர் சிறு தெய்வங்களுக்கான வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. அவற்றில் வைத்து வழிபடப்படும் சிறு தெய்வங்கள் பெரும்பாலும் சாதாரண மனிதர்களாக இருந்தவர்கள். ஏதோவொரு கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டவர்கள்; அல்லது தற்கொலை செய்துகொள்ள நிர்பந்திக்கப்பட்டவர்கள். அவர்களுடைய ஆவிகள் தங்களை பழி தீர்த்துவிடக் கூடாது என்ற அச்சத்தில், அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பரிகாரமாக, அவர்களை தெய்வமாக்கி வழிபடுவது கிராம மக்கள் மரபு.

அப்படி தெய்வமாக்கப்பட்ட ஒரு காதல் ஜோடியின் கதையை, தமிழ் மரபு தெரியாமல், அல்லது தெரிந்துகொண்டே தெரியாதது போல் பாவனை செய்துகொண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு பற்றிய நுணுக்கமான, பிரமிப்பூட்டும் தகவல்களை கலந்து, 1715ஆம் ஆண்டு நடக்கும் கதையாக ‘இளமி’ படத்தை படைத்து, தமிழ் கடமை ஒன்றை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குனர் ஜூலியன் பிரகாஷ்.

மதுரை வட்டாரத்தில் இருக்கும் இரண்டு கிராமங்களுக்கிடையே சுமார் 200 ஆண்டுகளாக குல தெய்வத்தை யார் வைத்திருப்பது என்பதில் பிரச்சனை இருந்து வருகிறது. இதில் ஒரு ஊரின் தலைவராகவும், எவராலும் அடக்க முடியாத வீரம் மிக்க ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வருபவருமாக இருக்கிறார்  ரவி மரியா. இவரின் மகள் நாயகி அனுகிருஷ்ணா (இளமி).

மற்றொரு ஊரில் நாயகன் யுவனும், வில்லன் அகிலும் வசிக்கிறார்கள். இதில் யுவன் விலங்குகளை வேட்டையாடுவதில் வல்லவர். அகில், ஜல்லிக்கட்டு காளையை சூழ்ச்சி செய்து தந்திரமாக அடக்குவதில் கில்லாடி.

நாயகன் யுவனும், நாயகி அனுகிருஷ்ணாவும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ரவிமரியாவின் ஊரில் திருவிழா ஏற்பாடு நடக்கிறது. இரண்டு ஊருக்கும் ஒரே சாமி என்பதால், யுவன், அகில் ஆகியோர் இருக்கும் கிராமத்திற்கு மரியாதை கொடுக்காததால் கோபம் அடைகிறார்கள். குல தெய்வத்தை தங்களுடைய கிராமத்திற்கு கொண்டு வருவதற்காகவும், ரவிமரியாவின் காளையை அடக்கி அவரது மகளை திருமணம் செய்யவும் திட்டம் போட்டு சூழ்ச்சி செய்கிறார் அகில்.

முதலில் கிராம மக்களை ரவிமரியாவிற்கு எதிராக திருப்பி, திருவிழாவிற்கு வைத்திருக்கும் கலசத்தை திருடி கொண்டுவந்து விடுகிறார் அகில். இதனால் கோபத்தோடு கிராம மக்களோடு வரும் ரவிமரியாவிடம், “உன் காளையை  அடக்கி விட்டால், அவனுக்கு உன் மகளை  திருமணம் செய்து தரவேண்டும்” என சவால் விடுகிறார்கள். இந்த சவாலை ரவிமரியாவும் ஏற்கிறார். இந்த போட்டியில் குதிக்கும் யுவன், அனுகிருஷ்ணாவை திருமணம் செய்யும் ஆசையில் காளையை அடக்கும் பயிற்சியில் இறங்குகிறார்.

இறுதியில், ரவிமரியாவின் காளையை அடக்கியது யார்? யுவனும், அனுகிருஷ்ணாவும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் யுவன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 18ம் நூற்றாண்டு பின்னணியில் கதை நகர்வதால், அந்த காலத்து இளைஞன் தோற்றத்திற்கு பொருந்தியிருக்கிறார். அனுகிருஷ்ணாவுடன் காதல் காட்சி, காளையை அடக்க பயிற்சி பெறுவது என நடிப்பில் திறமையை காண்பித்திருக்கிறார்.

அகில் கம்பீரமான வில்லனாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

நாயகியாக வரும் அனுகிருஷ்ணாவின் நடிப்பு அபாரம். யதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். ஊர் தலைவராக வரும் ரவிமரியா, தளபதியாக வரும் கிஷோர் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்திருந்தாலும், இப்படத்தில் ஜல்லிக்கட்டின் வரலாற்றையும், அதன் பெருமையையும் மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜூலியன் பிரகாஷ். காளையை அடக்குவதை தத்ரூபமாக காட்சிப்படுத்த முடியாததால், கிராபிக்ஸ் மூலம் அக்காட்சிகளை அழகாக சேர்த்திருக்கிறார். எந்த கதாபாத்திரத்தையும் குறை சொல்ல முடியாத அளவிற்கு வேலை வாங்கியிருக்கிறார். ஜல்லிக்கட்டு மையமாக இருக்கும் படத்தில் காதலை புகுத்தி அதில் எதிர்பாராத கிளைமாக்ஸ் வைத்திருப்பது சிறப்பு.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல் அனைத்தும் அருமை. பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.யுகாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். முக்கியமாக ஆர்ட் டைரக்ஷன். 18ஆம் நூற்றாண்டு கிராமங்களை கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள்.

‘இளமி’ – காதலையும், ஜல்லிக்கட்டையும் நேசிக்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து ரசித்து, ஆதரிக்க வேண்டிய படம்!

We support Ilami…!