பசும்பொன் தேவரை புகழும் பாடல் இடம் பெற்றுள்ள ‘முத்துராமலிங்கம்’ படத்தின் கதை!

கௌதம் கார்த்திக் நடிப்பில், ராஜதுரை இயக்கத்தில், குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் தயாரிக்கும் படம் ‘முத்துராமலிங்கம்’. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் நெப்போலியன், பிரியா ஆனந்த், வம்சி கிருஷ்ணா, விவேக், சுமன், பெப்சி விஜயன், சிங்கம் புலி, சிங்கமுத்து மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படம் பற்றி இயக்குனர் ராஜதுரை கூறுகையில், “கதை நாயகனின் பெயர் முத்துராமலிங்கம். அவனது தந்தை சிலம்பாட்ட வீரர். சிலம்பம் கற்று தரும் பள்ளி நடத்தி வருபவர்.

திருநெல்வேலியில் நடக்கும் சிலம்பம் போட்டியில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே மோதல் ஏற்பட, கதாநாயகன் எதிரிகளை தாக்குகிறான். இது குறித்து வில்லன் போலீசில் புகார் செய்ய, கைது செய்ய வரும் போலீஸ் அதிகாரிக்கும், கதாநாயகனின் தந்தைக்கும் மோதல் ஏற்படுகிறது. அதன்பிறகு, தந்தையோடு தலைமறைவாகிறான் கதாநாயகன். தனிப்படை போலீஸ் அதிகாரி இவர்களை கைது செய்யும் முயற்சியில் தோல்வியடைகிறார். 

கதாநாயகனோடு சிலம்பம் சண்டை செய்து ஜெயித்தால் அவனை கைது செய்யலாம் என கதாநாயகி சவால்விட, இந்த போட்டியில் போலீஸ் அதிகாரியும், கதாநாயகனும் களம் இறங்குகிறார்கள். அதில் கதாநாயகன் வெற்றியடைந்து ஊரையும் தந்தையின் மானத்தையும் காப்பாற்றுகிறான். இதுதான் ‘முத்துராமலிங்கம்’  படத்தின் கதை” என்கிறார் இயக்குனர் ராஜதுரை.

”படத்தில் காவல்துறை அதிகாரியாக வம்சி கிருஷ்ணாவும், அவருக்கு சிலம்பம் கற்றுக் கொடுப்பவராக பெப்சி விஜயனும், நாயகன் முத்துராமலிங்கமாக வரும் கௌதம் கார்த்திக்கின் அப்பாவாக நெப்போலியனும் நடித்துள்ளனர். இப்படத்தின் நாயகி ப்ரியா ஆனந்த் +2 படிக்கும் மாணவியாக வருகிறார். “படம் முழுக்க பாவடை, தாவணியில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார் ப்ரியா ஆனந்த்” என்கிறார் இயக்குனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் சிலம்பாட்டம் இப்படத்தின் மையமாக இருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. படத்தில் உள்ளவர்கள் அனைவரும் நெல்லை தமிழில்தான் பேசுவார்களாம். சிலம்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாயகன் கௌதம் கார்த்திக் மிகுந்த சிரத்தை எடுத்து சிலம்பம் கற்றுக் கொண்டாராம்.

இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. பசும்பொன் முத்துராமலிங்க தேவரை புகழும் சர்ச்சைக்குரிய பாடல் ஒன்று இப்படத்தில் இடம் பெற்றுள்ளது என்பதும், பஞ்சு அருணாச்சலம் எழுதிய இப்பாடலை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.