பண தட்டுப்பாடு: பசியை போக்க குடும்ப கட்டுப்பாடு செய்த கூலி தொழிலாளி!

ரூபாய் நோட்டு பிரச்சினையால் உ.பி.யில் வேலை இழந்த தொழிலாளி, தன் குடும்பப் பசியைப் போக்க குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டம் கேர் தாலுகாவின் மெஹரவுலா கிராமத்தைச் சேர்ந்தவர் புரண் சர்மா (45 வயது). அன்றாடம் கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வரும் இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 8 ஆம் தேதி இரவு நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மறுநாள் முதல் புரணுக்கு கூலி வேலை கிடைக்கவில்லை. கையில் இருந்த பணமும் காலியாகி, வீட்டில் வைத்திருந்த அரிசி, கோதுமையும் காலியாகி உள்ளது. இதனால், குடும்பத்தினர் பசியைப் போக்க அக்கம், பக்கம் கடன் கேட்டவருக்கும் பணம் கிடைக்கவில்லை.

அப்போது, உ.பி. அரசு சார்பில் கேர் தாலுகாவில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை முகாம் நடைபெற்று வந்தது.இதில், குடும்பக் கட்டுப்பாடு செய்யும் ஆணுக்கு ரூ.2000 மற்றும் பெண்ணுக்கு ரூ.1400-ம் கிடைப்பதாக அறிந்துள்ளார். இதன் உதவித்தொகைக்காக நேற்று குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டார் புரண் சர்மா.

இது குறித்து புரண் சர்மா கூறுகையில், ‘நவம்பர் 9 முதல் சில்லறை நோட்டுகள் தட்டுப்பாடு காரணமாக கூலி கொடுக்கப் பணம் இல்லை எனக் கூறி விட்டனர். இந்த வேலைகள் கொடுக்கும் முதலாளிகள் தங்கள் 500,1000 பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதிலும் இறங்கி விட்டனர்.

முதலில் எனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யலாம் என்ற போது அவரது நலிவான உடல்நலத்தால் செய்ய மறுத்து விட்டனர். வேறு வழியின்றி நான் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டும் பலனில்லை. இதன் தொகை வங்கி மூலமாக மாற்றப்படும் எனக் கூறி விட்டனர். இனி அதை பல மணி நேரம் வரிசையில் நின்று வாங்கியதில் 2000 ரூபாய் நோட்டாகக் கிடைத்து விட்டது. இப்போது அதற்கும் சில்லறை கிடைக்காமல் தவித்து வருகிறேன்’ எனத் தெரிவித்தார்.

உ.பி.யின் பல்வேறு கிராமப் பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில், அலிகர் மாவட்டத்தில் கடந்த வருடம் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 92. இந்த எண்ணிக்கை அலிகர் மாவட்டத்தில் இந்த வருட முகாம்களில் இருமடங்குகளாக அதிகரித்துள்ளது. இதற்கு புரண் சர்மா போன்ற கூலித் தொழிலாளிகள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டது காரணம் எனக் கருதப்படுகிறது.