“அது தான் நமது இலக்கு”: ‘மஞ்சள்’ நாடக நிகழ்வில் இயக்குனர் பா.ரஞ்சித்!

கடைசியா நான் நின்னுட்டே பாத்து கைதட்டி ரசிச்சது ‘படையப்பா’ படத்ததான். அதுக்கப்பறம் நேத்து நடந்த ‘மஞ்சள்’ நாடக நிகழ்வு. முன்னத விட அதிகமா கைதட்டி, அதிகமா விசிலடிச்சு பாத்தேன். அதுவும் இது சமூக நீதிக்காக, மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக கிளர்ந்தெழுந்த கைத்தட்டல்கள், விசில்கள்.

“ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி சேகர், கிரேஸி மோகன் வகையறா நாடகங்களுக்கு மட்டுமின்றி இம்மாதிரியான நாடகங்களுக்கும் கூட்டம் கூடும் என்று நிருபிக்க வேண்டிய பொறுப்பு இன்றைய சூழலில் அதிகமாகி இருக்கிறதென்பதை நாம் உணராதவர்களில்லை” என்று நிகழ்ச்சிக்கு முன்தினம் தமிழ்ப் பிரபா எழுதியிருந்ததை படித்தேன். அவன் உச்சி நிச்சயம் குளிர்ந்திருக்கும். அப்படியொரு கூட்டம். நிற்கக்கூட இடமில்லை.

நாடகக்குழுவின் உழைப்பு அசுரத்தனமாக இருந்தது. நடிப்பு, உடையமைப்பு, காட்சியமைப்பு, ப்ராப்பர்ட்டீஸ், லைட்டிங் என அத்தனையும் மிக நேர்த்தி. உள்ளடக்க ரீதியாக, நேர ரீதியாக சில விமர்சனங்கள் இருக்கிறது. ஆனாலும் நிறைய இடங்களில் அதிர வைத்தது ‘மஞ்சள்’. மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிநிலைக்கு எதிரான ஒரு புரட்சிக்குரலை நாடக வடிவில் கட்டமைத்த தோழர்களை அரவணைத்து வாழ்த்துகிறேன். தோழர் பாரதி செல்வா, இயக்கிய Srijith Sundaram, எழுதிய தோழர் ஜெயராணி உள்ளிட்ட மொத்த நாடகக் குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்நிலைக்கு எதிரான முதற்பெரும் தீப்பந்தத்தை ஏற்றி வைத்திருக்கிறீர்கள். சாதிய கட்டுமானம் மீது விரைவில் அந்நெருப்பு பற்றியெரியட்டும்.

0a

நாடகத்திற்கு பின்னான பேச்சுரையில் தோழர் திருமாவளவன், தோழர் ஜக்கையன் பேசியது மிகச் சிறப்பு. இது யாருக்கான நாடகம், யாருக்கு செல்ல வேண்டும் என்று தெளிவாக எடுத்துச்சொன்னார்கள். சினிமா பாணியிலேயே பேசிய இரு திரைக்கலைஞர்கள் சொன்ன கருத்துக்கள் பெருமளவில் அரங்கில் கொண்டாடப்பட்டது.

“எல்லா சாதியிலயும், சாதி வேணும்னு சொல்றவன விட வேணாம்னு சொல்றவன்தான் அதிகமா இருக்கான். அவன்லாம் அமைதியா இருக்கறதாலதான் சில சில்லரைக சத்தம் அதிகமா கேக்குது. இனி அவன்லாம் பேசணும். சாதி ஒழியணும்.” – சமுத்திரக்கனி.

“மனுசனே மனுச மலம் அள்ளுற வேலைய நிறுத்தறதுக்கு ஒரு சிம்பிள் வழி இருக்கு. வாரம் ஒவ்வொரு சாதிக்காரன் மலம் அள்ளணும்னு சொல்லிப் பாருங்க. உடனே டிசைன் டிசைனா மெஷின் கண்டுபுடிச்சு மலத்த அள்ள ஆரம்பிச்சுருவானுங்க’ – சத்யராஜ்.

இறுதியில் பேசிய இயக்குனர் ரஞ்சித், “இத்தனை நாள் எங்க வலியா மட்டுமே இது இருந்துச்சு. அத நீங்களும் உணரணும்னு தான் இத நாடகமா போட்டோம். கலை மூலமா போகும்போதுதான் ஒரு விஷயம் நிறைய மக்கள சென்றடையும். அதுதான் நம்ம இலக்கு. இது நமக்கான உரிமை, நாமளே இத எடுத்துக்குவோம். ஓக்கேயா?” என்று முடித்தார்.

இந்த நாடகம் மேடையேறுவதற்கு முழு காரணமாகவும் இருந்துள்ளார் இயக்குனர் ரஞ்சித். வணிக சினிமாவின் உச்சத்தில் செயல்பட்டாலும், தன் அரசியலில் இருந்து கொஞ்சமும் கலையாமல், கலையை தான் நம்பும் அரசியலுக்கான ஆயுதமாக பயன்படுத்துவதோடு நிற்காமல், அப்படி பயன்படுத்தும் அத்தனை பேருக்கும் மேடையாகவும் இருக்கிறார். பெரிய மரியாதையும், நிறைய பொறுப்பும், பெரும் தன்னம்பிக்கையும் எழுகிறது, தான் வந்த நோக்கத்தை நோக்கி இடைவிடாது செயல்படும் ரஞ்சித்தை பார்க்கும்போது. உங்களுக்கு ஒரு சல்யூட் தோழர் ரஞ்சித்!

JEYACHANDRA HASHMI

PHOTOS: GUNA photography.