கண் மட்டுமே எட்டும் தூரவானில் பறந்திருந்த அன்றில் பறவைகள் அவை!

என் பாட்டி இறந்திருந்தார்.

சொந்த பந்தங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிவிட்டோம். கல்லறை கட்ட சொல்லி விட்டிருந்தோம். ‘மழைக்காலம் என்பதால் புதைத்து மட்டும் விடுவோம். மழை சற்று ஓய்ந்ததும் கல்லறை எழுப்பலாம். இப்போது எழுப்பினால் காயாது’ என்றார் கல்லறை கட்டுபவர். சரியாகத்தான் பட்டது.

பாட்டி உடலை ஐஸ்பெட்டியில் கிடத்தி இருந்தோம். ஆசிரியர் என்பதால் நிறைய பேர் வந்திருந்தனர். ஜெபக்கூட்டம் முடிந்தது. பெட்டி மேல் இருந்த கண்ணாடி கூண்டை அகற்றினோம். அனைவரும் கடைசியாக பாட்டியை பார்த்தனர். அடுத்து சவப்பெட்டிக்குள் உடலை வைக்கப் போகிறோம். தாத்தா என்ன செய்யப் போகிறார் என பார்த்து கொண்டிருந்தோம்.

தாத்தாவும் பாட்டியும் மிக அந்நியோன்யமாக இருந்தவர்கள். கடைசி காலத்தில், அதாவது கடைசி பத்து வருடங்களாக இந்த வீட்டில் இருவர் மட்டுமென வாழ்ந்து வருகிறார்கள். மகன்கள் கல்யாணம் ஆகி தத்தம் குடும்பங்களுடன் தனியே வாழ்கின்றனர்.

தாத்தாவை விட பாட்டி பத்து வருடங்கள் இளையவர்தான். இருவருமே ஆசிரியர்கள். பெயருக்கேற்றார் போல் பாட்டி ராணி போல் வாழ்ந்தவர். அவ்வளவு கண்டிப்பு. ஆளுமை! ஆனால் இருவருக்கும் உள்ள காதல்தான் பெரும்புதிர்.

தாத்தாவை பாட்டி கொஞ்சி பார்த்ததில்லை. தாத்தாதான் பாட்டியை கொஞ்சிக் கொண்டே இருப்பார். பாட்டி இறப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்பு. பாட்டி படுத்த படுக்கையாக இருந்தார். பாட்டியின் மலஜலம் தாத்தா எடுத்துப் போட்டுவிட்டு படுக்கை மடித்து கொண்டிருந்தவர் சட்டென குரலை குறுக்கி, “எங்கே அந்த வெண்ணிலா… எங்கே அந்த வெண்ணிலா…” என பாடினார். பாட்டி உடனே, “ஷ்… பேரன் பேத்தில்லாம் இருக்குதுக’ என கடிந்ததும், நானும் தங்கைகளும் சிரித்து உருண்டோம்.

பெரும்பாலும் இப்படித்தான். பொதுவெளிகளில் கூட தாத்தா, பாட்டி மீதுள்ள காதலை காட்ட தயங்க மாட்டார். ஆனால் பாட்டி காட்டிக் கொள்ள மாட்டார். தாத்தா காதலை வெளிப்படுத்தும் போதெல்லாம் கடிந்து கொள்வார். பல நேரங்களில் மட்டம் தட்டுவார். ஆனாலும் தாத்தா பாட்டியை தாங்கு தாங்கு என தாங்குவார். பாட்டியிடம் காதல் தென்படவில்லை என்றாலும் தாத்தா இருக்கும்போது அந்த வெளியில் பாட்டியின் அருவமான காதல் மிதந்து கொண்டிருப்பதை உணர முடியும்.

வயதான காலத்தில் கூட, பாட்டிக்கு பேரன் பேத்திகளை உதவ தாத்தா விட மாட்டார். பாட்டி சம்பந்தப்பட்ட எதுவாகிலும் தான் தான் செய்ய வேண்டுமென விரும்பினார். பாட்டிக்கு என்னென்ன தேவை என சின்ன விஷயங்கள் தொடங்கி தானே அனைத்தையும் செய்தார். எழுபது வயதிலும் போய் லாரி தண்ணீரை தானே பிடித்து வருவார். பாட்டியை தன்னைவிட எவராலும் நன்றாக பார்த்துக்கொள்ள முடியாது என்ற மமதை, உரிமை அல்லது பொசசிவ்னெஸ் தாத்தாவிடம் இருந்தது. தனக்கும் வயதாகிறது என்ற எண்ணம் தாத்தாவுக்கு இருக்கவில்லை. பாட்டியின் அருகாமையில் தாத்தாவுக்கு வயது ஏறவே இல்லை.

அந்த platonic ஜோடியின் ஒரு மலர் உதிர்ந்ததும் அடுத்த மலர் என்ன செய்ய போகிறது என எல்லாரும் குழம்பித்தான் போய் இருந்தோம். பாட்டியை ஐஸ்பெட்டியில் கிடத்தியிருந்த போதும் அவர் உடலுக்கு போர்த்த வேண்டிய துணி, உடலுக்கு அடிக்க வேண்டிய திரவியம், கல்லறைக்கு மணல் சொல்வது என தாத்தாதான் ஓடி ஆடி வேலை பார்த்து கொண்டிருந்தார். எங்கள் யாரையும் வேலை செய்ய விடவில்லை. அவ்வளவு பெரிய வீட்டில் அடுத்த நாளிலிருந்து தாத்தா மட்டும்தான் இருக்க போகிறார் என்ற எண்ணமே எங்களுக்கு தொண்டையை அடைத்து கொண்டிருந்தது. எல்லாம் முடிந்து பாட்டியை தூக்கும் தருணத்துக்குள் தாத்தா உடைந்து அழுதுவிட வேண்டும் என எல்லாரும் விரும்பினோம். எதையும் பொருட்படுத்தாமல் வேலை செய்தபடி அவர் அடைந்து கொண்டிருந்த அழுத்தம் அதிகரித்து எங்கள் கழுத்தை நெரித்து கொண்டிருந்தது.

எல்லாரும் பாட்டி உடலை பார்த்து முடித்ததும் தூக்க நான் சென்றேன். தலை பெட்டியில் ஒட்டிவிட்டிருந்ததால் சற்று வலு கொடுத்து தலையை உயர்த்தினேன். தாத்தா நுழைந்து என்னை சற்று ஒதுக்கிவிட்டு, பாட்டியின் முகத்தை பார்த்தார். நெற்றியில் இருந்த முடியை ஒதுக்கிவிட்டு, நெஞ்சோடு அள்ளி அணைத்து, நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு, வழக்கம் போல் தன் குரலை குறுக்கிக்கொண்டு, குழந்தையை கொஞ்சும் ஸ்தாயியில், “நீ முன்னே போ ராணி.. நான் பின்னாலேயே வாரேன்.. என்ன?” என உடைந்தார். கூடி இருந்த எல்லாரும் விழுந்து கதறினோம். என் கையில் பாட்டியை சாய்த்துவிட்டு, தாத்தா விறுவிறுவென வெளியேறினார். நகுலனின் வரிகளை நான் மனனம் செய்தது அன்றுதான்.

பாட்டி மரணமடைந்து சில வருடங்கள்தான் ஆகியிருந்தது. சடசடவென உடல்நிலை சரிந்து தாத்தாவும் இறந்து போனார்.

பாட்டிக்கும் தாத்தாவுக்கும் அப்படி என்ன காதல் என எங்களுக்கு இன்று வரை புரியவில்லை. ஆனால் அந்த காதலின் உன்னதம் நான் பார்த்த வகையில் வேறெங்கும் காணவில்லை. பழையவை கொண்டிருந்த புனிதத்தால்தான் அருங்காட்சியகத்தில் இடம்பெறுகின்றன போலும்.

சொன்னபடி பாட்டியை முன்னே அனுப்பி தாத்தாவும் பின்னாடியே சென்றிருக்கிறார். ஆனால் ஒன்று மட்டும் இப்போது புரிகிறது. தாத்தாதான் நான் பார்த்த முதல் சிறந்த பெமினிஸ்ட். முதல் சிறந்த காதலர்!

பாட்டியின் தன்மைக்கு தாத்தா அல்லாமல் வேறொருவர் இருந்திருந்தால் அந்த உறவு நிச்சயமாக நீடித்திருக்காது. தாத்தாவும் பாட்டியும் பின்னர் காணக்கிடைக்காத மிக சிறந்த காதலர்கள்.

கண் மட்டுமே எட்டும் தூரவானில் பறந்திருந்த அன்றில் பறவைகள் அவை!

RAJASANGEETHAN JOHN