“தனியார் மருத்துவ இன்ஸ்சூரன்ஸ் கம்பெனிகளின் குளறுபடிகள்!” – இயக்குனர் வசந்தபாலன்

காப்பீடு தொகை சம்மந்தமாக தனியார் மருத்துவமனைகளின் புதிய கட்டுப்பாடுகள் என ஒரு நோயாளியாய் இருந்ததால் பல விபரங்கள் தெரிய வந்தன.

பல மருத்துவமனைகள் நாம் எந்த தனியார் மெடிகிளைம் பாலிசி வைத்திருந்தாலும் இந்த நோய்க்கு கவர் ஆகாது சார்..பணமா கெட்டியிருங்க என்று கூறுகிறார்கள்.கோவிட்டுக்கு நாங்க மெடிகிளைம் வாங்குகிறதில்ல என்கிறார்கள்.

அப்பறம் எதுக்கு வருஷாவருஷம் நாம் ஒரு பெரும் தொகைக்கு மெடிகிளைம் போட்டு வெச்சோம்ன்னு தோணும்…

சரி காச கடன் வாங்கி மருத்துமனையில் கொடுத்துவிட்டு கிளைம் பண்ணிக்கிடலாம்ன்னா…உங்களுக்கு ரத்த அழுத்தம் இருப்பதால் கிளைம் கிடைக்காது என்று இன்ஸ்சூரன்ஸ் கம்பெனிகள் சொல்கின்றன.

உபநோய்கள் இருப்பதால் நமக்கு பிரச்சினை வரும் என்று தெரிந்து தான் மெடிகிளைம் போடுகிறோம் அந்த அடிப்படையைக்கூட புரிந்து கொள்ளாமல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனிகள் பேசுகின்றன.

பணம் கட்டிய இன்ஸ்சூரன்ஸ் வாடிக்கையாளர்களை பல தனியார் மருத்துவமனைகளும் சில இன்ஸ்சூரன்ஸ் கம்பெனிகளும் அலைக்கழிக்கின்றன.

ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான என் தந்தைக்கு ஒன்றரை வருடத்திற்கு முன்பு செய்த குடல்வால்வு அறுவை சிகிச்சைக்கு இன்னும் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியில் இருந்து பணம் வரவில்லை.அது வேண்டும் இது வேண்டும் இது கவர் ஆகாது அவர் சீனியர் சிட்டிசன் கவர் ஆகாது என்று தட்டிக்கழிக்கவே இன்ஸ்சூரன்ஸ் கம்பெனிகள் முயல்கின்றன.

இதில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள காப்பீடு கார்டு வைத்துள்ள அடித்தட்டு மக்களின் நிலைமை கவலைக்கிடம்,.பல தனியார் மருத்துவமனைகள் முதல்வர் காப்பீடை நாங்கள் ஏற்பதில்லை என்கின்றனர். வறுமையில் உள்ள என் நண்பர் ஒருவருக்கு முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் வாயிலாக இதய அறுவைச்சிகிச்சை செய்யலாம் என்று பல தனியார் மருத்துவமனைகளை அணுகினால் இது முதல்வர் காப்பீடுல கவர் ஆகாது சில லட்சங்கள் கட்டுங்கள் அறுவை சிகிச்சை செய்கிறோம் என்கின்றனர்.

முதல்வர் காப்பீட்டு தொகைக்குள் இதய அறுவை சிகிச்சை செய்ய தனியார் மருத்துவமனைகள் தயாரில்லை.

அந்த அவசர காலத்தில் மருத்துவத்திற்கு தான் சேர்த்து வைத்து மொத்த வைப்புத்தொகையும் சேமிப்பும் நடுத்தர வர்க்கத்திற்கு செலவாகிறது.

இந்த இன்ஸ்சூரன்ஸ் கம்பெனிகளின் குளறுபடிகள், முதல்வர் காப்பீடு திட்டத்தை மதிக்காத தனியார் மருத்துவமனைகளின் பிரச்சினைகள் இவைகளை அரசு ஒரு குழு அமைத்து தீர்த்தால் தான் நடுத்தர வர்க்கத்திற்கும் அடித்தட்டு வர்க்கத்திற்கும் மருத்துவ உதவிகள் தடையின்றி சரியான நேரத்தில் தரத்துடன் கிடைக்கும்.

வசந்தபாலன்