‘ஜில் ஜங் ஜக்’ விமர்சனம்

வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் என பெயர் பெற்றிருப்பவர் சித்தார்த். அவரது நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகி வெளிவந்திருக்கும் முற்றிலும் மாறுபட்ட ‘ஃபேண்டஸி க்ரைம் காமெடி’ ரக ‘பிளாக் ஹ்யூமர்’ படம் ‘ஜில் ஜங் ஜக்’. கதையாலும், கதாபாத்திரங்களாலும் மட்டும் அல்ல, அவை சொல்லப்பட்டுள்ள ‘nonlinear’ முறையாலும் இப்படம் தனித்துவம் பெறுகிறது.

சமகாலத்திலோ, கடந்த காலத்திலோ அல்ல… எதிர்காலத்தில், அதாவது 2020ஆம் ஆண்டு நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது படத்தின் கதை. அந்த ஆண்டு உலகெங்கும் கடும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, பெட்ரோலுக்கும், பணத்துக்கும் பயங்கர தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் அமரேந்திரனின் (தெய்வநாயகத்தின்) தொழிலில் நஷ்டத்துக்கு மேல் நஷ்டம். அவரிடம் கடைசியாக கையிருப்பில் இருப்பது 4 கிலோ போதை மருந்து மட்டுமே. அதை ஐதராபாத்தில் உள்ள சீன மாபியாவிடம் விற்க முடிவு செய்கிறார்.

இதற்காக ஒரு விஞ்ஞானியின் உதவியுடன் போதை மருந்தை பெயிண்ட் போல் மாற்றி, ஒரு காரில் பூசச்செய்து, ‘பிங்க்’ நிற காரை தயார் செய்கிறார். இந்த காரை குறிப்பிட்ட நேரத்தில் சரியாக ஐதராபாத் கொண்டுபோய் சேர்க்க சித்தார்த் (ஜில்),  அவினாஷ் ரகுதேவன் (ஜங்), சமந்த் ரெட்டி (ஜக்) ஆகிய மூன்று இளைஞர்களை தேர்வு செய்கிறார்.

மூன்று இளைஞர்களும் காரை ஓட்டிச் செல்லும் வழியில் சில சதிகளும், தடைகளும் குறுக்கிடுகின்றன. இதில் கார் வெடித்துச் சிதறுகிறது. இது போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனுக்குத் தெரிந்தால் நமக்கு மரணம் நிச்சயம் என்று எண்ணும் சித்தார்த், அந்த தலைவனின் பரம எதிரியான ராதாரவியை (ரோலக்ஸ் ராவுத்தரை) தூண்டிவிடுகிறார். அதன்பிறகு சித்தார்த் உள்ளிட்ட மூன்று இளைஞர்களும் எப்படி உயிர் தப்புகிறார்கள் என்பது மீதிக்கதை.

சின்னச் சின்ன பித்தலாட்டங்கள் செய்யும் சித்தார்த் (ஜில்), பெரிய கடத்தல் வேலை செய்ய பொறுப்பேற்கும் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமானவராக இருக்கிறார். மெட்ராஸ் தமிழ் பேசும் அவரது வசன உச்சரிப்பும், உடல் மொழியும் கனகச்சிதம். அவர் நடிப்பை வெளிப்படுத்த இப்படத்தில் நிறையவே வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய முகபாவனைகள் மிகவும் ரசிக்க வைக்கிறது.

அவினாஷ் ரகுதேவன் (ஜங்), சமந்த் ரெட்டி (ஜக்) இருவரும் சித்தார்த்துடன் போட்டி போட்டு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ரோலக்ஸ் ராவுத்தராக வரும் ராதாரவி, தெய்வநாயகமாக வரும் அமரேந்திரன், நரசிம்மனாக வரும் நாகா, அட்டாக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாய்தீனா, பை கேரக்டரில் நடித்திருக்கும் பிபின், மருந்து கேரக்டரில் நடித்திருக்கும் பக்ஸ் என்ற பகவதி பெருமாள், சோனு ஸாவந்தாக நடித்திருக்கும் ஜாஸ்மின் பாஸின், சனந்த் அப்பாவாக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். விஷால் சந்திரசேகரின் இசை பொருத்தம். இரண்டாம் பாதி ஏன் இவ்வளவு நீளம் என்ற அலுப்பும், சோர்வும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. காஸ்டிங், கலர் டோன், ஃப்ளேவர், சூழல் என்று எல்லா விதங்களிலும் இயக்குநரின் புத்திசாலித்தனம் தெரிகிறது. குறிப்பாக கதையை 2020-ல் நடப்பதாக காட்டுவது லாஜிக், காஸ்டியூம், செட் பிராபர்டி உள்ளிட்ட பலவற்றைப் பற்றி யோசிக்க விடாமல் செய்கிறது.

டார்க் ஹ்யூமர் தமிழுக்குப் புதியது அல்ல. கமல்ஹாசனின் படங்களில் இத்தகைய காமெடியை அதிகம் பார்த்திருக்கிறோம். தவிர ‘சூது கவ்வும்’, ‘மூடர் கூடம்’ போன்ற படங்களும் இந்த ரகத்தைச் சேர்ந்தவைதான். இத்தகைய காமெடியின் தனித்துவம் என்னவென்றால், எடுத்த எடுப்பில் சிரிப்பு வராது. சிந்தித்துப் பார்த்த சிறிது நேரத்துக்குப் பிறகுதான் சிரிப்பு வரும்.

‘ஜில் ஜங் ஜக்’ – சிந்தித்துப் பார்த்தபின் சிரிப்பவர்களுக்குப் பிடிக்கும்!