‘வில் அம்பு’ விமர்சனம்

மனித வாழ்க்கையில், ஒரு மனிதன் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சனைக்கும் இன்னொரு மனிதன் காரணமாக இருக்கிறான். பிரச்சனைக்கு காரணமானவருக்கும், அப்பிரச்சனைக்கு ஆளானவருக்கும் இந்த உண்மை தெரிவதில்லை. ஆக, ஒருவனது வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும், அதில் இன்னொருவன் சம்பந்தப்பட்டிருப்பான் என்பதுதான் சமூகவிதி. இதை கதைக்கருவாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் ‘வில் அம்பு’.

நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர் நாயகன் ஹரிஷ் கல்யாண். இவர் தன் அப்பாவின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாதவர். அப்பாவுக்காக தனது ஆசைகளையெல்லாம் துறந்து வாழ்ந்து வருபவர். இவரும் நாயகி சிருஷ்டி டாங்கேயும் காதலிக்கிறார்கள். அந்த பகுதியில் உள்ள சேரியில் வசிக்கும் இன்னொரு நாயகியான சாந்தினி, ஹரிஷ் கல்யாணை ஒருதலையாக காதலிக்கிறார்.

அதே சேரியின் இன்னொரு பகுதியில், குடிகார தந்தையின் மகனான இன்னொரு நாயகன் ஸ்ரீ, சிறுசிறு திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய துணிச்சலைப் பார்த்து, இவர்மீது காதல் வயப்படுகிறார் பள்ளி மாணவியும் மற்றுமொரு நாயகியுமான சம்ஸ்க்ருதி. காதல் ஏற்படுத்தும் மாற்றம் காரணமாக திருட்டுத் தொழிலை விட்டொழித்து, நேர்மையாக உழைத்து முன்னேற முடிவெடுக்கிறார் ஸ்ரீ.

இந்நிலையில், ஸ்ரீ வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு மறைமுகமாக காரணமாக இருக்கிறார் ஹரிஷ் கல்யாண். அதேபோல, ஹரிஷ் கல்யாண் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு ஸ்ரீயின் நடவடிக்கைகளே காரணமாகின்றன. ஆனால், இந்த இரண்டு பேருக்கும் இது தெரிவதில்லை என்பதோடு, இவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாமலே, இவர்களது வாழ்வில் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு நடைபெறுகிறது. இறுதியில் இவர்கள் என்ன ஆனார்கள்? இதனால் இவர்களது வாழ்வில் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது மீதிக்கதை.

ஹரிஷ் கல்யாண் தன் தந்தை சொல் தட்டாத மகனாகவும், அதேசமயம் தனது ஆசைகளை வெளிக்காட்டாமல் தனக்குள் அடக்கி வைத்து அவதிப்படுபவராகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரது கதாபாத்திரம், பார்ப்பவர்களை பரிதாபப்பட வைக்கிறது.. அதை இவர் சிறப்பாக செய்திருக்கிறார். எந்த கெட்டப்பில் வந்தாலும் பார்க்க அழகாக இருக்கிறார்.

ஸ்ரீக்கு எதற்கும் பயப்படாத கதாபாத்திரம். துணிச்சலான பேச்சால் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக, காதலியின் வீட்டுக்குள் மாட்டிக் கொண்ட அவர், அந்த நேரத்தில் அவர் எடுக்கும் முடிவு, காதலியின் தந்தையிடம் இவர் பேசும் வசனங்கள் என அனைத்தும் சிறப்பு.

ஸ்ரீயின் துணிச்சலை பார்த்தே அவரை காதலிக்கும் சம்ஸ்க்ருதியின் துணிச்சலுக்கும் குறைவு இல்லை. இவர் தரும் முகபாவனைகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. கதாபாத்திரத்தை உணர்ந்து நன்கு நடித்திருக்கிறார். இவருடைய வசனங்களும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

சிருஷ்டி டாங்கே, ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளே வந்தாலும் ரசிக்கும்படி செய்திருக்கிறார். சாந்தினியின் கதாபாத்திரத்துக்கு முதல்பாதியில் வலுவில்லை. ஆனால், இறுதிக் காட்சியில் தனது கதாபாத்திரத்திற்கு வலுவூட்டி ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கிறார்.

யோகிபாபுவின் பஞ்ச் வசனங்கள் கலகலப்பூட்டுகின்றன. ஹரிஷ் உத்தமன் சில காட்சிகளே வந்தாலும் தனது கதாபாத்திரத்தில் ஜொலித்திருக்கிறார்.

இரண்டு நாயகர்களை வைத்து ஒரே ரூட்டில் பயணிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒன்று. அதை இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் அருமையாக கையாண்டிருக்கிறார். அதேபோல், இருவரும் எப்போது சந்திப்பார்கள்? என்ற ஏக்கத்தையும் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார். திரைக்கதையை விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் டுவிட்ஸ்ட் வைத்து முடித்திருப்பது சிறப்பு.

மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. ஒரு சிறிய தெருவுக்குள் நடக்கும் சண்டை காட்சிகளை எல்லாம் இவரது கேமரா அழகாக படமாக்கியிருக்கிறது. நவீன் இசையில் 3 பாடல்கள்தான் என்றாலும், அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

‘வில் அம்பு’ – கூர்மை!