ஜெயலலிதா கையெழுத்துக்கு பதிலாக கைரேகை: தேர்தல் அதிகாரிகள் ஏற்பார்களா?

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 19ஆம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கி, நடந்து வருகிறது. இதில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் மாற்று வேட்பாளர்கள் அனைவரும், 28ஆம் தேதி மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், கட்சி சின்னத்தை ஒதுக்கக் கோரும் படிவம் ஏ, வேட்பாளரை அங்கீகரிக்கும் படிவம் பி ஆகியவற்றில் கட்சித் தலைவர் கையொப்பம் இடம்பெற வேண்டும்.

தற்போது அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, அவரது இடதுகை பெருவிரல் ரேகை வேட்பு மனு படிவங்களில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா கையெழுத்து போடாமல், பெருவிரல் ரேகையை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், ஜெயலலிதாவிடம் பெருவிரல் ரேகையை வாங்கி, அதற்கு சான்றொப்பம் இட்டுள்ள சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பி.பாலாஜி இது குறித்து கூறியிருப்பதாவது:

முதல்வரின் உடல்நிலை நன்றாக உள்ளது. எழுந்து உட்காருகிறார். நன்றாக பேசுகிறார். கை வழியாக மருந்துகள் செலுத்தப்படுவதால் கைகளில் வலி இருக்கிறது. அவரால் பேனாவைப் பிடித்து கையெழுத்துப் போட முடியவில்லை. அதனால்தான் அவர் பெருவிரல் ரேகையை வைத்தார்.

அவர் நன்றாக இருக்கிறார். நான் அவரிடம் பேசினேன். அவரும் என்னிடம் நன்றாக பேசினார். விரைவில் முதல்வர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்.

இவ்வாறு டாக்டர் பி.பாலாஜி கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆரும் அப்படித்தான்

இந்த நடைமுறை என்பது புதிதல்ல. 1984ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபடியே, எம்ஜிஆர் மனு தாக்கல் செய்தார். மனுவில் அவரிடம் கைரேகை பெற்றே தாக்கல் செய்யப்பட்டது. அவரும் வெற்றி பெற்று, முதல்வரானார்.

இது தொடர்பாக, எம்ஜிஆர் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஹெச்.வி.ஹண்டே கூறியிருப்பதாவது:

கடந்த 1984ஆம் ஆண்டு அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியில் உள்ள மருத்துவமனையில் எம்ஜிஆர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது நடந்த பொதுத்தேர்தலில், அவர் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். அவரது வேட்பு மனுவில், வலது கையால் கையெழுத்து போட முடியாத நிலையில் இருந்தார். எனவே, இடது கை பெருவிரல் ரேகையை பதிவு செய்தார். இதை அங்கீகரித்து புரூக்ளின் பகுதி இந்திய துணைத் தூதரக அதிகாரியாக இருந்த வட இந்தியர் சான்றொப்பம் இட்டார்.

அடுத்த நாள் வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாள் என்பதால், அந்த மனுவைப் பெற்றுக்கொண்டு நான் உடனடியாக இந்தியா திரும்பினேன். மனுவை நெடுஞ்செழியன் மற்றும் ஆர்.எம்.வீரப்பனிடம் அளித்தேன்.

அப்போது கட்சியின் பொதுச் செயலாளராக ப.உ.சண்முகம் இருந்தார். வேட்புமனுவில் படிவம் ‘ஏ’ என்பது, கட்சியின் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்படுவது. எம்ஜிஆரின் மனுவில் இதற்கான பிரச்சினை எழவில்லை.

தற்போது முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். அவர் உடல் நிலை கருதி, அவரது இடது கை பெருவிரல் ரேகை பெறப்பட்டு, வேட்பாளர்களின் மனுக்களில் படிவம் ‘ஏ’ இணைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்பதை முடிவு செய்யும் அதிகாரம் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் உள்ளது. அவர் ஏற்றுக்கொண்டால் பிரச்சனை இல்லை.

இவ்வாறு ஹண்டே கூறியுள்ளார்.

ஏற்கப்படுமா?

தேர்தல் விதிகளைப் பொறுத்த வரை, கட்சியின் தலைவர் அல்லது பொதுச்செயலாளரின் கையெழுத்து இடம்பெற வேண்டிய இடத்தில், அவரால் மை அடங்கிய பேனாவால் இடப்பட்ட கையெழுத்து இருக்கலாம். முடியாதபட்சத்தில் விரல் ரேகைப் பதிவு இருக்கலாம். கையெழுத்துப் பிரதியை பதிவு செய்வதோ அல்லது ரப்பர் ஸ்டாம்ப்பில் உள்ள கையெழுத்தைப் பதிவு செய்வதோ ஏற்கப்படுவதில்லை.

தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் விரல் ரேகை பதிவு அடங்கிய மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. நவம்பர் 3ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை தொடங்குகிறது. அப்போது, தேர்தல் நடத்தும் அதிகாரிகளே மனுக்களின் மீதான இறுதி முடிவுகளை எடுப்பார்கள். அவர்கள் ஜெயலலிதாவின் கைரேகையை ஏற்பார்களா, நிராகரிப்பார்களா என்பது அப்போது தெரிய வரும்.

@