ஜெயலலிதாவின் கைரேகை: தேர்தல் அதிகாரிகள் ஏற்பு!

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக் கூட்டணி ஆகியவை புறக்கணித்துள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளிடையே 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாயன்று தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரது கட்சி வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கக் கோரும் மனுவில் அவர் கையெழுத்து போடுவதற்கு பதிலாக தனது கைரேகையை பதிவு செய்திருந்தார். இது செல்லுபடி ஆகுமா என்ற கேள்வி எழுந்தது.

இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது தேர்தல் அதிகாரிகள் ஜெயலலிதாவின் கைரேகையை ஏற்றுக்கொண்டார்கள். இந்நிலையில், மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க, தி.மு.க வேட்பாளர்களின்  மனுக்கள் பரிசீலனைக்கு பிறகு ஏற்று கொள்ளப்பட்டுள்ளன.

இதுபோல், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், புதுச்சேரி முதல்வருமான நாராயணசாமியின் வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.