“விஜய் வளர்ச்சியை போலவே விஜய் ஆண்டனி வளர்ச்சியையும் கண்டு மகிழ்கிறேன்!” – எஸ்.ஏ.சி.

விஜய் ஆண்டனி இசையமைத்து நாயகனாக நடிக்க, அவரது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் படம் ‘சைத்தான்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனரும் தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ டாக்டர் கே.கணேஷ், ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி சிவா உள்ளிட்ட பலரும், படக்குழுவினரும் பங்கேற்றனர்.

“திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி. ‘தன்னம்பிக்கை’ என்னும் புத்தகமாக செயல்படும் அவரின் வெற்றிக்கு முதுகெலும்பாய் இருப்பவர், அவருடைய துணைவியார் பாத்திமா விஜய் ஆண்டனி தான்” என்றார் தயாரிப்பாளர்  ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி சிவா

“விஜய் ஆண்டனி நடித்த திரைப்படத்தை பார்த்த பிறகு, நான் அவருடைய ரசிகனாக ஆகிவிட்டேன். அவர் தேர்ந்தெடுத்து நடித்த  ஒவ்வொரு திரைப்படமும் என் மனதோடு ஒட்டி பயணிக்கக் கூடியதாகத்தான் இருக்கும். தற்போது அவருடைய ‘சைத்தான்’ அவதாரத்தை காண ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் தயாரிப்பாளர் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ டாக்டர் கே.கணேஷ்.

“விஜய் ஆண்டனி படங்களின் தலைப்புகள்  எதிர்மறையாக இருந்தாலும், அந்த படங்களின் கதைக்களங்கள் யாவும் அவரை போலவே ரசிகர்களின் மனதை வெல்லக்கூடியதாக தான் இருக்கும். தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் மத்தியிலும் அவர் ஹீரோவாக வலம் வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய மகன் விஜயின் வளர்ச்சியை கண்டு நான் எப்படி மகிழ்ச்சி கொள்கிறேனோ, அதேபோல் தான் விஜய் ஆண்டனியின் வளர்ச்சியையும் கண்டும் நான் ஆனந்தம் கொள்கிறேன்” என்றார் இயக்குநர் – தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

தெலுங்கில் ‘பெத்தலுடு’ என்று தலைப்பிடபட்டிருக்கும் ‘சைத்தான்’ திரைப்படம் அந்த மாநிலத்தில் 600 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.