மோடிக்கு ரஜினி கடிதம்: “சந்திக்க விரும்புகிறேன்; நேரம் ஒதுக்குங்கள்!”

லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு டெல்லி ஜவகர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ரஜினிகாந்த், வில்லனாக நடிக்கும் ஹிந்தி நடிகர் அக்ஷய்குமார், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் டெல்லியில் முகாமிட்டுள்ளார்கள். இங்கு ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ள பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகள் வழங்கும் விழா இம்மாதம் 28ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 12ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக டெல்லியில் நடைபெற இருக்கிறது. அப்போது ரஜினி டெல்லி படப்பிடிப்பில் தான் இருப்பார் என்பதால், அவர் தனக்கு வழங்கப்படும் பத்மவிபூஷன் விருதை நேரில் பெற்றுக்கொள்ள இருக்கிறார்.

இதற்கிடையில், தற்போது டெல்லியிலிருக்கும் ரஜினி, பத்ம விருது வழங்கும் விழாவுக்கு முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ,க. மூத்த தலைவர் அத்வானியையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்புக்கு நேரம் ஒதுக்கும்படி கேட்டு, ரஜினி அலுவலகத்தில் இருந்து மின் அஞ்சல் மூலம் மோடி, அத்வானி ஆகிய இருவரது அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் மோடியையும், அத்வானியையும் சந்திக்க ரஜினி நேரம் கேட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதா? அல்லது அரசியல் நோக்கம் கொண்டதா? என்பது தெரியவில்லை.