கையெழுத்து போடும் நிலையில் ஜெயலலிதா இல்லை: ஃபார்ம் பி-யில் பெருவிரல் ரேகை பதிவு!

கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல் ரேகை, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல்களுக்காக வேட்பு மனுதாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்களின் ஃபார்ம் பி-யில் பதிவாகியுள்ளது.

நவம்பர் 19-ம் தேதி இந்த 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் இம்மூன்று சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவுடன் கட்டாயம் தாக்கல் செய்யப்பட வேண்டிய ஃபார்ம்-பி-யில் ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல் ரேகை பதியப் பெற்றுள்ளது.

0a

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத் தேவைகளின்படி எந்த ஒரு அரசியல் கட்சி சார்பாகவும் போட்டியிடும் வேட்பாளர்கள் அக்கட்சியின் தலைவர் அதிகாரபூர்வ கையொப்பம்/ கைரேகைப் பதிவு கொண்ட ஃபார்ம்-பி படிவத்தை தாக்கல் செய்வது அவசியமாகும்.

இந்நிலையில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான வேட்பு மனுவை அதிமுக வேட்பாளர்கள் அக்டோபர் 28-ம் தேதி தாக்கல் செய்தபோது ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல் ரேகை பதிந்த ஃபார்ம்-பி படிவத்தை காண முடிந்தது.

இந்த கட்டை விரல் ரேகைப்பதிவை அங்கீகரிக்கும் விதமாக மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மினிமல் ஆக்சஸ் சர்ஜரி பேராசிரியர் டாக்டர் பி.பாலாஜி மற்றும் அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பாபு கே.ஆப்ரஹாம் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதை கவனத்தில் கொண்ட டாக்டர் பாலாஜி தனது சான்றிதழில், “கையெழுத்திட வேண்டியவருக்கு டிராகியாஸ்டமி சிகிச்சை நடைபெற்றது மேலும் அவரது வலது கையில் அழற்சி ஏற்பட்டுள்ளதால் அவர் தனது வலது கையைப் பயன்படுத்தி கையெழுத்திடுவது தற்காலிகமாக முடியவில்லை என்பதால் அவர் தானாகவே தன் இடது கை பெருவிரல் ரேகையை எனது முன்னிலையில் பதிவு செய்தார்” என்று கூறியுள்ளார்.

டிராகியாஸ்டமி என்பது கழுத்தில் சிறு துளை வழியாக மூச்சு விட ஏதுவாக மெல்லிய குழாய் செலுத்தப்படுவதும் நுரையீரலில் சேரும் திரவம் மற்றும் கபத்தை அகற்றுவதுமான சிகிச்சை முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக்குழாய்க்கு டிராகியாஸ்டமி குழாய் என்று பெயர்.