காங்கிரஸ் கட்சியின் கதை முடியப் போகிறது: ஜெய்ராம் ரமேஷ் கவலை!

அன்னிய மூலதனத்துக்கும், இந்திய பெருமுதலாளியத்துக்கும் புரோக்கராக இருந்து மக்கள் விரோத கொள்கைகளை அமல் செய்வது, இந்திய ஒன்றிய கூட்டாட்சி முறைக்கு வேட்டு வைப்பது, மாநில உரிமைகளைப் பறிப்பது, இந்தியை திணிப்பது, தமிழின உணர்வை காலில் போட்டு மிதிப்பது என இன்று மோடி அரசு செய்கிற அனைத்து அக்கிரமங்களுக்கும் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்த காங்கிரஸ் கட்சியின் கதை முடியப் போகிறது என்ற கவலை வந்துவிட்டது, காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழின விரோதியும், ‘ஜல்லிக்கட்டு ஒழிப்பு’க்கான பீட்டாவின் கைக்கூலியுமான ஜெய்ராம் ரமேஷூக்கு.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. 1996-2004 இடையே அதிகாரத்தில் இல்லாதபோது தேர்தல் நெருக்கடியைத் தான் காங்கிரஸ் சந்தித்து வந்தது, எமெர்ஜன்சிக்குப் பிறகான 1977-லும் தேர்தல் நெருக்கடியைத் தான் சந்தித்து வந்தது.

ஆனால் இன்று காங்கிரஸ் சந்தித்து வருவது அதன் இருப்புக்கே விடுக்கப்பட்ட சவாலான நெருக்கடியாகும். இது தேர்தல் நெருக்கடி அல்ல. கட்சி உண்மையில் ஆழமான நெருக்கடியில் இருக்கிறது.

மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக நிற்கிறோம் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள்., வித்தியாசமாகச் செயல்படுகிறார்கள். எனவே நாங்களும் எங்கள் அணுகுமுறையில் நெகிழ்வுத் தன்மையுடன் இல்லாவிட்டால் நாங்கள் தொடர்பற்று போய்விடுவோம், அன்னியப்பட்டுப் போய்விடுவோம், இதனை நான் உள்ளபடியே கூறுகிறேன்.

இந்தியா மாறிவிட்டது என்பதை காங்கிரஸ் கட்சி அங்கீகரிக்க வேண்டும். பழைய கோஷங்கள் எடுபடாது, பழைய உத்திகள் செல்லாது. பழைய மந்திரங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்தியா மாறிவிட்டது, காங்கிரஸ் கட்சியும் மாற வேண்டும்.

2017 இறுதியில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என்று நினைக்கிறேன்.

என்னிடம் எதிர்பார்ப்பு மட்டுமே உள்ளது. 2018, 19-ல் நடைபெறும் மாநிலத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் மோடியும், அமித் ஷாவும் சுறுசுறுப்படைவார்கள். எனவே எங்களுக்கு நிச்சயமின்மை நிச்சயமாக உதவாது.

2019 தேர்தலில் மோடிக்கு வலுவான சவால் அளிக்க வேண்டுமெனில் தனிநபர் மந்திரக்கோல் உதவாது மாறாக கூட்டு பலத்தையே மோடிக்கு எதிராக நம்ப வேண்டும்.

எங்களிடமிருந்து அதிகாரம் போய் விட்டது, ஆனால் இன்னமும் சுல்தான்கள் போல் சிலர் நடந்து கொள்கின்றனர். நாங்கள் சிந்திக்கும் முறையையே மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.

காங்கிரஸ் மீது மக்களுக்கு நல்லெண்ணம் உள்ளது, ஆதரவும் உள்ளது ஆனால் மக்கள் புதிய காங்கிரஸைக் காண விரும்புகின்றனர். பழைய மந்திர உச்சாடனங்களை அவர்கள் விரும்பவில்லை. இதனை உண்மையான, மிகப் பெரிய சவாலாக காங்கிரஸ் கருத வேண்டும்.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.