“ஓவியாவின் காதலுக்கு ஆரவ்வை பலி கொடுத்து நம் திருட்டுத்தனங்களை மறைக்கிறோம்!”

பிக் பாஸ் போட்டி அதில் பங்கேற்பவர்களுக்காக மட்டும் அல்ல. பார்க்கும் நமக்கும் சேர்த்துதான். போன வாரத்தில் ஓவியாவின் நடவடிக்கை மாறியதும் நிகழ்ச்சியைப் பார்ப்பதை நிறுத்தியவர்கள் எத்தனை பேர்? ஆரவ்வை கழுவி ஊற்றியவர்கள் எத்தனை பேர்? இன்று ஆரவ் நிர்மூலமாக்கப்பட்டதும் லேசாகவேனும் கலங்கியவர்கள் எத்தனை பேர்?

ஏன் இது?

ஒரு பங்கேற்பாளரை பார்க்கிறோம். பிடிக்கிறது. அதற்குப் பிறகு ரசிகர் ஆகிறோம். நம் எதிர்பார்ப்புகளை எல்லாம் அவர் தலையில் ஏற்றி வைக்கிறோம். பிறகு அது உடைகிறது. அப்படி உடைவது அவர் பிம்பம் மட்டும் அல்ல. நம் எதிர்பார்ப்பும் கூடத் தான். அதாவது, நம் நம்பிக்கை உடைகிறது. நம்பிக்கை என்பது நம் ஆளுமை சம்பந்தப்பட்டது. நாம் எதுவாக இதுவரை இருக்கிறோமே… அதன் விளைவாகத் தான், அதன் முழு வடிவாகத் தான் அந்த நம்பிக்கை உருவாகிறது. ஆக அந்த நம்பிக்கை உடைகையில், உண்மையில் உடைவது நம் ஆளுமை. நாம்!

இது எத்தனை சிக்கலுக்குரிய பிரச்சனை தெரியுமா?

ஆளுமை உடைத்தல் என்பது பெரும் கவனிப்புடனும், அக்கறையுடனும், புரிதலுடனும், அறிவுடனும் நிகழ்த்தப்பட வேண்டும். அப்படி இல்லையெனில் அது உடைத்தலாக இருக்காது. சிதைத்தலாக மட்டுமே இருக்கும். பிக் பாஸ் நிகழ்த்துவது சிதைத்தலை.

எனக்கு அந்த புரிதல் இருக்கிறது. அதனால் எட்ட நிற்கிறேன். ஓவியா, ஆரவ் இருவரும் சம அளவில் எனக்கு இச்சமூகத்தின் victimகளாக தெரிகிறார்கள். எத்தனை பேருக்கு இந்த புரிதல் சாத்தியம்? என் தங்கைகளில் ஒருத்தி, ஓவியா நடவடிக்கை மாறியதும் நிகழ்ச்சி பார்ப்பதை நிறுத்திவிட்டாள். இன்னொருத்தி ஓவியா வெளியேறியதால் ஒரு மணி நேரம் அழுதாள். இதெல்லாம் ஏன்?

நிகழ்ச்சி பார்ப்பதை நிறுத்தி நாம் கொண்ட நம்பிக்கையை காப்பாற்றுகிறோம். நம் ஆளுமையை காப்பாற்றிக் கொள்கிறோம். அந்த நம்பிக்கை சரியா, தவறா என்ற ஆராய்ச்சிக்கே போக முற்படுவதில்லை. அழுது தீர்த்தும் நம் ஆளுமையை காப்பாற்றி கொள்கிறோம். ஏன் ஓவியா மாறினார், ஆரவ் மாறினார் என யோசிக்க விரும்புவதில்லை. அப்படியே யோசித்தாலும் ஏற்கனவே கட்டமைத்த நம் நம்பிக்கைக்கு ஏற்ற ஒரு காரணத்தையே கண்டறிந்து கொள்கிறோம். அந்த காரணம்தான் பொதுப்புத்தி எனப்படுவது. அப்சல் குருவை கொன்ற கூட்டு மனசாட்சி!

அந்த வீட்டில் இருப்பவர்களும் மனிதர்களே என்பதும் மனிதன் imperfect என்ற உண்மைகளும் புரிந்திருந்தாலே, நம்மால் ஓவியாவையும், ஆரவ்வையும், ஷக்தியையும், ஜூலியையும், இன்னும் பிறரையும் எளிதாக புரிந்து கொண்டிருக்க முடியும். ஆனால் அவர்கள் மீது நம் நம்பிக்கைகளை கட்டியெழுப்புவதால், நம் கடவுளரைப் போல் அவர்களையும் definite characterகளோடு நினைக்க விரும்புகிறோம். ஆனால் அவர்கள் அப்படி இல்லை என அடுத்த நாளே தெரியும்போது நாம் உடைகிறோம்.

அந்த வீட்டில் இருப்பவர்களைவிட அதிக ஆபத்து இருப்பது நம் கூட்டுமனத்தில்தான். அவசரகதியில் ஒரு தண்டனை எதிபார்க்கிறோம்.

நிர்பயா கொலைகாரர்களுக்கு தூக்கு கொடுத்து வன்புணர்வை இலகுவாக கடந்ததை போல், ஓவியாவின் காதலுக்கு ஆரவ்வை பலி கொடுத்து நம் திருட்டுத்தனங்களை மறைத்து கொள்கிறோம். நிர்பயா கொலையில் நாம் இருக்கிறோம். அதேபோல் ஓவியாவிலும், ஆரவ்விலும், காயத்ரியிலும், ஜூலியிலும், ஷக்தியிலும் கூட நாம் இருக்கிறோம். இந்த உண்மை புரியாமல் போலி நம்பிக்கைகள் கொண்டு நம் ஆளுமைகளை காப்பாற்றிக் கொண்டிருந்தோமெனில், பிக் பாஸ் நிகழ்ச்சி நம்மை சிதைத்துக்கொண்டு தான் இருக்கப் போகிறது. அந்த சிதைவு நிச்சயமாக ஆரோக்கியமாக இருக்கப் போவதில்லை.

நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியால் மேலும் மேலும் மன அழுத்தம் அடையப் போகிறீர்கள். பதற்றம் கொள்ளப் போகிறீர்கள். நிம்மதி இழக்கப் போகிறீர்கள். இவற்றுக்கு காரணமாக, நீங்கள் இருக்க போகிறீர்கள். உங்கள் சமூகப் புரிதல் இருக்கப் போகிறது…

RAJASANGEETHAN JOHN