‘ஓவியா’க்கள் ‘சுமதி’களாக மாறுவதில் அழகு ஏதும் இல்லை!

அப்போது நான் சிறுவன். அந்த வரிசை வீடுகளில் கடைசிக்கும் முதல் வீடு தான் நாங்கள் குடியிருந்த வீடு. அநேகமாக இரண்டாம் அல்லது மூன்றாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

வரிசையில் உள்ள முதல் வீட்டில் புதுமண தம்பதி ஒன்றும், பையனின் அம்மாவும் குடியிருந்தார்கள். பையனின் பெயர் மணி. அவரின் அம்மா கல்யாணி. அவர் மனைவி சுமதி.

ஞாயிற்றுக்கிழமை வந்தால் குதூகலம் ஆகி விடுவேன். காலை உணவாக அம்மா பூரி செய்வார். பூரி எனக்கு ரொம்ப பிடிக்கும். வாரத்தின் ஆறு நாட்களையும் பூரிக்கான கனவுகளுடனே கடப்பேன். அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமைதான் அன்றும்.

என் அனத்தல் தாங்காமல் மாவை பிசையத் தொடங்கினார் அம்மா. கிழங்கு அடுப்பில் வெந்துகொண்டிருந்தது. என் அதிர்ஷ்டத்துக்கு பூரிக்கட்டை காணாமல் போயிருந்தது. சுமதியக்காவிடம் வாங்கி வரச் சொன்னார் அம்மா. பூரி கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதற்றத்தில் சுமதியக்கா வீட்டுக்கு ஓடினேன்.

கதவு அடைத்திருந்தது. தட்டினேன். திறக்கவில்லை. தட்டிக்கொண்டே இருந்தேன். ம்ஹும். கூப்பிட்டுப் பார்த்தேன். எந்த எதிர்வினையும் இல்லை. கதவின் இடுக்கு வழியே பார்த்தேன். உள்ளே ஹாலுக்கு நுழையும் கதவருகே சாய்ந்து நின்று கொண்டிருந்தார். எனக்குப் புரியவில்லை. ‘சுமதிக்கா…. சுமதிக்கா….’. அவர் அசையவே இல்லை. அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

சுமதியக்கா எப்போதும் இப்படித்தான். தன் வேலையை மட்டும்தான் செய்வார். தனக்கு உதவி வேண்டுமானால் என் அம்மாவிடம் வந்து கேட்பார். ஆனால் அடுத்தவருக்கு ஓர் உதவியென்றால் பொருட்படுத்தவே மாட்டார்.

மணி அண்ணனை கொஞ்சிக்கொண்டே இருப்பார். ஆனால், கல்யாணி ஆண்ட்டியை அவர் நடத்தும் விதம் எனக்கே ரொம்ப கஷ்டமாக இருக்கும். கல்யாணி ஆண்ட்டி ஒற்றை ஆளாக நின்று மணி அண்ணனை வளர்த்தவர். மிகவும் நல்லவர். ஒரு ஆங்கிலோ இந்தியர் வீட்டில் பாத்திரம் துலக்கும் வேலை செய்தார்.

தன் ஒற்றை மகனுக்காக வாழ்க்கை முழுக்க உழைத்து, படிக்க வைத்து, நல்ல வேலை பார்க்க வைத்து, கல்யாணமும் பண்ணி வைத்தவர் கல்யாணி ஆண்ட்டி. கைகள் காய்ப்பு காய்த்திருக்கும். அப்புராணியாய் என்னை கொஞ்சுவார். எந்த கெட்ட எண்ணமும் இருக்காது.

அவமதிக்கும் சுமதியக்காவைப் பற்றி கேட்டாலும் ‘அதுங்க சின்னஞ்சிறுசுங்க. அப்படி இப்படி இருக்கணும்னு நெனைக்குதுங்க. நம்மள இடைஞ்சலா பார்க்குதுங்க. மிஸ்ஸியம்மாக்கிட்ட சொல்லி இருக்கேன் அவங்க வீட்டிலேயே ஒரு ஓரமா தங்கிக்கிறேன்னு. இன்னும் கொஞ்ச நாள்ல போயிடுவேன். என்ன, மணிய பார்க்க முடியாதுன்னு நெனைக்கும்போதுதான்…’என தன் முந்தானையை எடுத்து கண்களை துடைத்து மூக்கு சிந்துவார்.

சுமதியக்கா கல்யாணி ஆண்ட்டியோடு வேண்டுமென்றே சண்டை போடுவார். கல்யாணி ஆண்ட்டிதான் பாவம். தலைகவிழ்ந்து ஏதும் சொல்லாமல் அமைதியாக அழுது கொண்டிருப்பார்.

மணி அண்ணனிடம் சுமதி கொஞ்சு கொஞ்சென கொஞ்சுவார். அண்ணனுக்கோ மனைவி தன் அம்மாவை நடத்தும் விதத்தில் வருத்தம் உண்டு. சமயங்களில் சண்டை போடுவார். அப்போதெல்லாம் சுமதியக்கா மணி அண்ணனை கட்டி ஏறிவிடுவார். சில மாதங்களில் ஒன்றிரண்டு தடவை மணி அண்ணன் சாராய போதையில் தள்ளாடி விழுந்ததையும் பார்த்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட சுமதியக்காவிடம் இதற்கு மேல் எப்படி பூரிக்கட்டை கேட்பது? அம்மாவிடம் சென்று விம்மியபடியே சொன்னேன், கதவைத் தட்டியும் சுமதியக்கா நின்றுகொண்டே திறக்காமல் இருந்தார் என்று. ஒருவழியாய் தொலைந்து போன வீட்டிலேயே பூரிக்கட்டையை கண்டுபிடித்தோம். இழந்த சொர்க்கம் மீண்டது. அம்மா பூரி சுட தொடங்கினார்.

திடீரென கல்யாணி ஆண்ட்டி அலறும் சத்தம். அம்மா வெளியே ஓடினார். ஸ்டவ்வை அணைத்துவிட்டு வெளியே வந்து பார்த்தேன். பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் கல்யாணி ஆண்ட்டி வீட்டுக்கு முன் கூடி இருந்தனர். கல்யாணி ஆண்ட்டி தலைவிரிகோலமாக தரையில் உட்கார்ந்து அரற்றி கொண்டிருந்தார். வீட்டுக்குள் ஹாலின் கதவருகே, சுமதியக்கா கோரமாக தொங்கிக் கொண்டிருந்தார். நாக்கு வெளியே தள்ளியிருந்தது. விழி பிதுங்கியிருந்தது. சேலை தலைப்பு கழுத்தைச் சுற்றியிருந்தது. அம்மா என்னை இழுத்து கண்களை மூடி பின்னால் நிறுத்தி கொண்டார்.

நேரம் கழிந்தது. மணி அண்ணன் அழுதபடி ஓடி வந்தார். சுமதியக்காவை அப்படியே இறக்கி தன் மடியில் சாய்த்து தலையில் அடித்துக் கொண்டு அழுதார். பின் சுமதியக்கா சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு எரிந்தும் போனார். மணி அண்ணனை போலீஸ் விசாரித்தார்கள். வீட்டு ஓனர் வீட்டை காலி செய்யச் சொன்னார்.

எனக்கு மட்டும் கல்யாணி ஆண்ட்டியை மறக்கவே முடியவில்லை. அவர் உள்ளங்கையின் காய்ப்பு இன்னும் நினைவு இருக்கிறது. மகனுக்காக மட்டுமே வாழ்ந்திருந்தார். மகனுக்காக அவர் வாழ்க்கையிலிருந்து ஒதுங்கவும் தயாராக இருந்தார். அது மணி அண்ணனுக்கு எத்தனை வலியை கொடுத்திருக்கும் என என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. கல்யாணி ஆண்ட்டி மீது மணி அண்ணன் கொண்டிருந்த அன்பை சுமதியக்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஏழெட்டு வருடங்களுக்கு முன் ஒரு தடவை கல்யாணி ஆண்ட்டியை நானும் அம்மாவும் பார்த்தோம். கண்கள் உள்ளே போயிருந்தது. கரிய, சுருக்கமான கன்னத்தோல். என்னை பார்த்ததும் கண்கள் ஒளிர்ந்து கள்ளங்கபடமில்லா அதே சிரிப்பு.

மணி அண்ணன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. கல்யாணி ஆண்ட்டி இன்னும் அதே ஆங்கிலோ இந்தியா வீட்டில்தான் பாத்திரம் துலக்கிக் கொண்டிருக்கிறார். வாழ்க்கை மட்டும் துலங்கவே இல்லை. தன்னை கொன்ற சுமதியக்கா, இவர்கள் இருவரின் வாழ்க்கையையும் சேர்த்து கொன்று பழி தீர்த்து கொண்டார்.

ஓவியாக்கள் ஓவியாக்களாக இருக்கும் வரைதான் அழகு. சுமதியக்காக்களாக மாறுவதில் அழகு ஏதும் இல்லை. ஏனெனில், சுமதியக்காக்கள் இங்கு அதிகம். ஓவியாக்கள்தான் பஞ்சம்.

அந்த ஞாயிற்றுக்கிழமை நான் இழந்த பூரியை மறக்கவே முடியவில்லை.

RAJASANGEETHAN JOHN