காயத்ரியை “கட்டம்” கட்ட தீயாய் வேலை செய்யும் பிக் பாஸ் வாக்காளர்கள்!

இந்த வாரம் வெளியேற்றப்படுபவரை தேர்வு செய்ய, ரைசா நீங்கலாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஏனையோர் (பிந்து மாதவி, காயத்ரி, சக்தி, வையாபுரி, சினேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம்) அனைவரும் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, பெரும்பாலான பிக் பாஸ் பார்வையாளர்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் காயத்ரி, முதன்முதலாக தற்போது நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.

இவர்களில் யாரையெல்லாம் வெளியேற்ற விடாமல் காப்பாற்ற வேண்டுமோ அவர்களுக்கெல்லாம் பிக் பாஸ் பார்வையாளர்கள் வாக்களிக்க வேண்டும்; மிக மிகக் குறைவான வாக்குகளைப் பெறும் போட்டியாளர், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என்பது விதி, ஆகையால், முதன்முதலாக ‘மூத்திர சந்து’க்குள் சிக்கியிருக்கும் காயத்ரியை ‘வச்சு செய்ய’ பிக் பாஸ் வாக்காளர்கள் தயாராகி விட்டார்கள்.

அவர்கள் காயத்ரியை தண்டிக்க எப்படி “ராணுவ கட்டுப்பாட்டுடன்” வாக்களிப்பது என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதிப்பது, வியூகம் அமைப்பது, கேன்வாஸ் செய்வது ஆகியவற்றை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது…

பிக் பாஸ் வாக்காளர் ஒருவர் தனது உத்தியை இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்: “Don’t vote Kayu.

பிக்பாஸ் வீட்டில் நாம் வெளியேற்ற வேண்டியவர்கள் மூன்று, நான்கு பேர் இருக்கலாம். ஆனால், ஒரே வாரத்தில் எல்லோரையும் வெளியேற்ற முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால், ஒரே ஒருவரை டார்கெட் செய்து வெளியேற்றுவதே சரியான யுக்தி.

அவ்வகையில் ஹிட்லிஸ்டில் முதலில் இருப்பது காயத்ரி தான். அதனால் மற்றவர்கள் எல்லோரையும் (அதில் சிலரைப் பிடிக்காவிட்டாலும்) காப்பாற்றும் வகையில் ஓட்டுக்களைப் பிரித்துப் போட்டால் தான் காயத்ரி வெளியேறுவது உறுதிப்படும். அல்லாது போனால் நோக்கம் சிதறி, வாக்குகள் குழம்பி வேறு யாராவது வெளியேற்றப்படும் வாய்ப்புண்டு.

அதனால், அன்பர்கள் காயத்ரியை மட்டும் கச்சிதமாய் கட்டம் கட்டுங்கள்.”

இதுபோல் இன்னொருவர், “ஏழு பேர் நாமினேட் ஆகியிருந்தாலும், ஜனங்க காயத்ரிய மட்டும் கல்லால அடிச்சு தொறத்தணும். ஜனங்க எவ்வளவு வெறுக்கிறாங்கனு அதுக்கு புரியணும்” என்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, ‘காயத்ரியை வெளியேற்றாமல் சக்தியை மட்டும் வெளியேற்றி காயத்ரியை தண்டிக்கலாம்’ என்பது இன்னொரு சாரார் வியூகம். “எல்லாரும் காயத்ரிய தூக்க இதவிட்டா சான்ஸ் கிடைக்காதுன்னு ப்ளான் பண்ணி ஓட்டுப் போட ஆரம்பிச்சிட்டாங்க. ஏம்பா… இப்போ அத தூக்குனீங்கன்னா அதுவே, ‘ஆமா, நானே போகணும்னு தான் இருந்தேன்’னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகி போய்டும்…

அதுக்குப் பதிலா, நாம இப்போ சக்திய டார்கெட் பண்ணி தூக்கிட்டோம்னா, காயுவுக்கு நல்ல “என்கரேஜ்மெண்ட்”டா இருக்கும்ல…! பிக்பாஸ் வீட்ல தனியா மாட்டிக்கும்… ரைசாவும் பிந்துமாதவியும் சேர்ந்துக்கிட்டு கேள்விக்கு மேல கேள்வி கேட்டு கதற விடுவாங்க… ஆண்டவரும் நல்லா வெச்சு செய்வாரு… அத எல்லாம் பாத்துட்டு வெளிய அனுப்பலாம்…

அதனால இப்ப நம்ம குறி சக்திதான்.. காயு இல்ல” என்பது ஒரு வாக்காளரின் வியூகம்.

இதுபோலவே, இன்னொருவரது வியூகமும் இருக்கிறது. “ரெண்டு பேருக்கு ஓட்டு போடறது ஈசியா இருந்துச்சு. இம்புட்டு பேருக்கு பிரிச்சுப் போட கஷ்டமா இருக்குபா. டெய்லி ஒரு ஆளுக்கு 50 ஓட்டு போட்டுருவோம்..

திங்கள் – பிந்துமாதவி
செவ்வாய் – வையாபுரி
புதன் – கணேஷ்
வியாழன் – ஆரவ்
வெள்ளி – காயத்ரி…

சக்தி வெளில போகணும்.. இருந்த ஒரே ஒரு சப்போர்ட்டும் இல்லாமப் போயி, காயத்ரி கிறுக்குப் பிடிச்சு திரியணும்.. கதறிக் கதறி அழுது ‘என்னைய வெளில விட்டுடுங்க’ன்னு கெஞ்சணும். தான் ஒண்ணுமே இல்ல, வெறும் ஸீரோன்னு உணர்ந்து, உள்ளுக்குள்ள புழுங்கி சாவணும்.. பரணி மாதிரி சுவரேறி குதிக்கணும்.. ஸ்ட்ரெஸ் தாங்காம டாக்டர் வந்து டைரக்டா ஏர்வாடிக்கே கூட்டிப் போயிடணும்…

அதுக்கு அப்பறம் நாங்க, ‘காயத்ரி ஒரு புனித ஆத்மா, அவரை இப்படியெல்லாம் திட்டலாமா?’ன்னு ஜூலிக்கு மாதிரியே போஸ்ட் போட்டு ஆதரவு தெரிவிப்போம்..!” என்கிறார் அவர்.

யப்பா… எப்படியெல்லாம் வியூகம் அமைத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஓட்டு போடுகிறார்கள்…! இதேபோல மாநில, மத்திய தேர்தல்களிலும் வாக்காளர்கள் அனைவருமே பணம் வாங்காமல், சிந்தித்து, விவாதித்து, வியூகம் அமைத்து வாக்களித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்…!

அமரகீதன்