பாஜக சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகர் ‘ஹாயாக’ வந்தார்! ஜாமீன் வாங்கி சென்றார்!!

தமிழக பாஜக நிர்வாகியும், மேடை நாடக சிரிப்பு நடிகருமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக விமர்சித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதனை கண்டித்தும், எஸ்.வி.சேகரை கைது செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு மாவட்ட போலீஸ் நிலையங்களில் அவர் மீது பத்திரிகையாளர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் கணவருடைய அண்ணன் என்பதாலும், மத்திய ஆளுங்கட்சியின் நிர்வாகி என்பதாலும் அவரை போலீசார் கைது செய்யவில்லை.

 எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அவருக்கு முன்ஜாமீன் கொடுக்க மறுத்த உயர்நீதிமன்றம், எஸ்வி சேகரை கைது செய்ய தடை இல்லை என்றும் அறிவித்தது. இதனை தொடர்ந்து முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால் உச்சநீதிமன்றமும் முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

இதன்பிறகும் போலீசார் அவரை கைது செய்யாமல், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும், ஜாலியாக உலா வரவும் அனுமதித்ததோடு பாதுகாப்பும் கொடுத்தனர்.

இந்நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, எஸ்.வி.சேகர் ஜூன் 20ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இதனால், எஸ்வி சேகர் தனது வீட்டிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று (20ஆம் தேதி) கிளம்பிவந்து, எழும்பூர் நீதிமன்றத்தின் பின்வாசல் வழியாக நுழைந்து ஆஜரானார். எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி, ஜூலை 18ஆம் தேதி ஆஜராகும்படி உத்தரவிட்டது. அவர் மீண்டும் நீதிமன்றத்தின் பின்வாசல் வழியாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ‘ஹாயாக’ புறப்பட்டுச் சென்றார்.

‘ராஜா வீட்டு கன்றுக்குட்டி’ என்பார்களே… அதுபோல ‘கிரிஜா வீட்டு கன்றுக்குட்டி’யான எஸ்.வி.சேகர், பெண்ணுக்கு எதிராக வன்கொடுமைக் குற்றம் இழைத்திருந்தாலும் ஜாமீன் பெற்று ஜாலியாகத் திரியலாம்! பாரத் மாதாக்கீ ஜே!