கைது செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் பாலா ஜாமீனில் விடுவிப்பு!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 23-ம் தேதி இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில், 4 பேரும் உயிரிழந்தனர்.

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து, பலமுறை புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், கலெக்டரிடம் புகார் அளித்தார். அவரும் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை முடிவை எடுத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கந்து வட்டிக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான கருத்துகள் பதிவிடப்பட்டு பகிரப்பட்டன.

சென்னை மாங்காடு சத்தியா நகரில் வசிக்கும் கார்ட்டூனிஸ்ட் பாலாவும் (36) தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) வரைந்தார். அதில் தமிழக முதல்வர், நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோரை கடுமையாக விமர்சித்திருந்தார்.

0a1e

இக்கார்ட்டூனை அக்டோபர் 24-ம் தேதி இரவு 11.55 மணி அளவில் பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். அதில், ஆத்திரத்தின் உச்சத்தில் நான் வரைந்தேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். தான் நடத்தி வரும் லைன்ஸ் மீடியாவிலும் இந்த கேலிச் சித்திரத்தை பதிவு செய்திருந்தார்.

அவரது முகநூல் பதிவை சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்திருந்தனர். 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பகிர்ந்திருந்தனர்.

கார்டூனிஸ்ட் பாலாவின் கேலிச்சித்திரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நெல்லை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இப்புகாரின்பேரில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தகவல் தொழில்நுட்ப சட்டம் 67-வது பிரிவு (ஒருவரை அவமானப்படுத்தும் விதமாகவோ, காமத்தை தூண்டும் வகையிலோ படம் வரைந்து அதை மின்னணு தொழில்நுட்பம் மூலம் பகிர்தல்), இந்திய தண்டனைச் சட்டம் 501-வது பிரிவு (அவதூறு பரப்புதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பாலாவின் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து நேற்று (ஞாயிறு) காலையில் மாங்காட்டில் உள்ள பாலாவின் வீட்டுக்கு சென்ற நெல்லை மாவட்ட போலீஸார், அவரை கைது செய்து நெல்லைக்கு அழைத்து சென்றனர்.

கார்டூனிஸ்ட் பாலா கைது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என பத்திரிகையாளர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இன்று (திங்கள்) காலை, கார்ட்டூனிஸ்ட் பாலாவை நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது போலீஸாருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் நீதிபதி ராமதாஸ் முன் ஆஜர் செய்யப்பட்டார் பாலா. அவருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து பாலா விடுவிக்கப்பட்டார்.

 

 

Read previous post:
0a1e
“ஹெச்.ராஜா சார், கவுத்துறாதீங்க”: உதயநிதி ஸ்டாலின் பட இயக்குனர் கிண்டல்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'இப்படை வெல்லும்' திரைப்படம் வருகிற 9ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. கவுரவ் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ்,

Close