நாளை 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி: இன்று கருணாநிதியுடன் மோடி திடீர் சந்திப்பு! 

பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்) காலை சென்னை வந்தார். காலை 10.30 மணியளவில் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற ‘தினத்தந்தி’ நாளிதழின் 75ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்றார். பின்னர் சாந்தோம் அருகில் ஐ.ஏ.எஸ் அதிகாரி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டார். அதன்பின்னர் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக கோபாலபுரம் வந்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சகிதம் வந்த மோடியை, கருணாநிதி வீட்டு வாசலில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.. அப்போது திமுகவை சேர்ந்த துரைமுருகன், டிகேஎஸ். இளங்கோவன், பாஜகவின் தமிழிசை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வீட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட மோடி, அங்கு அமர்ந்திருந்த கருணாநிதியை சந்தித்தார். அவரிடம் உடல் நலம் பற்றி விசாரித்தார்.

மோடி வந்திருப்பதை மு.க.ஸ்டாலின் கருணாநிதி காதில் கூறினார். மோடி கருணாநிதியின் தோளில் கைவத்துப் பேசினார். பின்னர் கருணாநிதியின் கைகளைப் பிடித்துக்கொண்டார். மோடி பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு கருணாநிதியை முதல் முறையாக சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு முரசொலி பவழ விழா மலரை கருணாநிதி பரிசாக வழங்கினார். சுமார் 15 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பு முடிந்த பின்னர் மோடி விடை பெற்று புறப்பட்டுச் சென்றார்.

கனிமொழி, ஆ.ராஜா ஆகியோர் சம்பந்தப்பட்ட 2ஜி வழக்கின் தீர்ப்புத் தேதி நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கருணாநிதியை மோடி திடீரென சந்தித்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் வண்டி வண்டியாக கேள்விகளையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Read previous post:
0a1d
கைது செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் பாலா ஜாமீனில் விடுவிப்பு!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 23-ம் தேதி இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில், 4 பேரும் உயிரிழந்தனர். கந்துவட்டி

Close