மானுடத்தின் மாபெரும் விடுதலைக் கனவு வெற்றி பெற்றே தீரும்!

ரஷ்யப் புரட்சிக்கு முன் உலக வரலாறு எத்தனையோ புரட்சிகளைக் கண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் நடந்த பெரும்பாலான புரட்சிகள், ஆட்சியாளர்களை மாற்றுவதற்காக மட்டுமே நடந்தவை. ஆனால், ஒட்டுமொத்த சமூகத்தையே மாற்றியமைக்கிற, அவற்றின் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்புகளை மாற்றியமைக்கிற முழுமையான புரட்சியாக லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சி அமைந்திருந்தது.

மேலும் அது ஒரு குறிப்பிட்ட நிலப் பிரதேசத்தில் நடந்த ஆட்சி மாற்றம் மட்டுமில்லை. ஜார் பரம்பரையினரின் 300 ஆண்டு கால கொடுங்கோலாட்சி வீழ்த்தப்பட்டதோடு, உலகு தழுவிய சோஷலிஸப் புரட்சியாகவும் அது தன்னை அறிவித்துக்கொண்டது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் இடதுசாரி அறிவுஜீவிக் குழுக்களும் தொழிலாளர் அமைப்புகளும் தீவிரமாக இயங்கின. எனினும் அவற்றால் அரசியல் அழுத்தங்களைக் கொடுக்க முடிந்த அளவுக்கு, அரசியலில் பெரும் மாற்றங்களை உருவாக்க முடியவில்லை. அதற்கான விலையை ரஷ்யாவே கொடுக்க முன்வந்தது. சர்வதேச அளவில் முதலாளித்துவத்தின் கழுகுப் பார்வையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருந்தது. தனது நில எல்லைக்கு வெளியே நடந்த சோஷலிஸப் போராட்டங்களுக்கு தார்மிக ஆதரவையும் அது வழங்க வேண்டியிருந்தது.

புரட்சியின் வெற்றியைத் தக்கவைத்துக்கொண்ட ஐந்தே ஆண்டுகளில் ரஷ்யா, தனது அருகமைந்த நாடுகளை ஒன்றியமாகத் திரட்டியது. உலகின் பரப்பளவில் ஆறில் ஒரு பங்கு சோஷலிஸத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது. சீனா, கியூபா, வெனிசுலா என்று இதர பகுதிகளில் சோஷலிஸத்தை நோக்கிய ஒவ்வொரு நகர்வுக்கும் ஆதரவை ரஷ்யா வழங்கியது.

இந்தியா போன்ற விவசாய உற்பத்தி நாடுகள் சோவியத் ரஷ்யாவிடமிருந்தே திட்டமிடலையும் ஐந்தாண்டுத் திட்ட முறைகளையும் கற்றுக்கொண்டன. விவசாய உற்பத்தி நாடான இந்தியா, தொழில்துறையிலும் கவனம் செலுத்தத் தொடங்கிய இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கு சோவியத் ரஷ்யாவே முன்னோடி.

மேலும், இந்தியாவில் முன்னோடி இரும்பு உருக்காலைகள் தொடங்கப்படுவதற்கும் ரஷ்யா பொருளுதவி செய்திருக்கிறது. இன்று இந்தியாவின் திட்டமிடல் கொள்கையும் அதன் அமைப்புமுறையும் மாறிப் போனதையும்கூட நாம் சோஷலிஸப் பயணத்திலிருந்து விலகி நடப்பதன் அடையாளமே.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, முதலாளித்துவம் சர்வதேச வணிக ஒப்பந்தங்களின் வழியாக இன்று தன்னை வலிமைப்படுத்திக்கொண்டிருக்கிறது. இது சோஷலிஸத்தின் வீழ்ச்சியோ, முதலாளித்துவமே இறுதியில் வெற்றி பெறும் என்ற பேராசைக் கனவின் அறிகுறியோ அல்ல. வரலாறு நெடுகிலும் முதலாளித்துவம் தனது தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டே தன்னை வலுப்படுத்திக்கொண்டிருக்கிறது.

இன்று நாடுகளின் எல்லைகளைக் கடந்து நிற்கும் பெருமுதலாளித்துவம் தனது தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன்னைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்றால், சோஷலிஸம் தனது பலவீனங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதா என்ன? மானுடத்தின் மாபெரும் விடுதலைக் கனவு தடைப்பட்டிருக்கலாம். ஆனால், அது வெற்றி பெற்றே தீரும். மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சோஷலிஸக் கனவு முழுமையாய் நிறைவேறும் நாளில்தான் மானுடம் என்ற வார்த்தை தனக்கான முழுமையான பொருளைப் பெறும்.

(தமிழ் இந்து நாளிதழ் தலையங்கம்)

Courtesy: Tamil.thehindu.com