‘யாக்கை’ எனப்படுவது யாதெனில்…
“உயிர் உள்ள ஒரு உடலை குறிக்கும் சொல் யாக்கை” என்று ‘யாக்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விளக்கம் கொடுத்தார், விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் கரு பழனியப்பன்.
குழந்தை வேலப்பன் இயக்கத்தில், ‘பிரிம் பிக்சர்ஸ்’ முத்துக்குமரன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘யாக்கை’. திரைப்படம். கிருஷ்ணா, சுவாதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார் . யாக்கை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இயக்குனர்கள் கரு பழனியப்பன், விஷ்ணு வர்தன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இந்த விழாவில், தயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகர், தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவர் தேனப்பன், இர்பான், இயக்குனர் பெரோஸ், ஜாஸ் கண்ணன், ‘DIVO’ மியூசிக் ஷாஹிர், இயக்குனர் இளன், இயக்குனர் ராஜா ராமன், நடிகர் சரவணன் ஆகியோரும், தயாரிப்பாளர் ‘பிரிம் பிக்சர்ஸ்’ முத்துக்குமரன், இயக்குனர் குழந்தை வேலப்பன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மார், படத்தொகுப்பாளர் சாபு ஜோசப், கிருஷ்ணா சுவாதி, ‘ஜோக்கர்’ புகழ் குரு சோமசுந்தரம், ‘மெட்ராஸ் ஜானி’ ஹரி கிருஷ்ணன், சிங்கம் புலி, மாரிமுத்து என ஒட்டுமொத்த யாக்கை படத்தின் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.
“உயிர் உள்ள ஒரு உடலை குறிப்பது தான் ‘யாக்கை’. இத்தகைய வலிமையான தமிழ் சொல்லை தலைப்பாக கொண்டுள்ள யாக்கை படத்தின் கதையும் வலுவானதாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தன்னுடைய முதல் படத்திலேயே இது போன்ற தனித்துவமான கதை களத்தை தேர்வு செய்த ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்” என்றார் இயக்குனர் கரு. பழனியப்பன்.
“ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னை ஒரு தரமான நடிகராக மென்மேலும் உயர்த்திக்கொண்டே போகும் கிருஷ்ணாவை பார்க்கும்பொழுது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. .யாக்கை படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்றார் இயக்குனர் விஷ்ணு வர்தன்.
“என் மனதோடு ஒட்டி இருக்கும் ஒரு திரைப்படம் யாக்கை. எங்களுடைய ‘யு 1 ரெகார்டஸ்’ நிறுவனம் ஆரம்பித்த பிறகு நான் இசையமைத்த முதல் திரைப்படம் ‘யாக்கை’ என்பதே அதற்கு முக்கிய காரணம். இது போன்ற ஒரு உற்சாகமான இளம் படக்குழுவினருடன் பணியாற்றுவது, எனக்கு புத்துணர்ச்சியை தந்திருக்கிறது” என்றார் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா.