தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவிகள் 3 பேர் பலி: ஆசிரியைகள் சாலை மறியல்!

சென்னை கிண்டி மேம்பாலம் அருகே உள்ளது செல்லம்மாள் மகளிர் கல்லூரி. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளான சித்ரா, ஆயிஷா, காயத்ரி ஆகியோர் எப்போதும் ஒன்றாகவே கல்லூரிக்கு போய் வருவார்களாம். அதுபோல் இன்றும் கல்லூரி முடிந்து வீட்டுக்குத் திரும்புவதற்காக சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது பிரேக் பிடிக்காத தண்ணீர் லாரி ஒன்று வேகமாக வந்து மோதியதில் இந்த மாணவிகள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட கல்லூரி மாணவிகள் கதறி அழுதபடி மருத்துவமனைக்கு விரைந்தனர். மாணவிகளின் உறவினர்களும், பெற்றோர்களும் ராயப்பேட்டை மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

0a

இதனிடையே, கிண்டியில், செல்லம்மாள் மகளிர் கல்லூரி ஆசிரியைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செல்லம்மாள் கல்லூரி எதிரே சரியான பாதுகாப்பு இல்லை என ஆசிரியைகள் குற்றம்சாட்டினர். செய்தியாளர்களிடம் பேசிய செல்லம்மாள் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, “கிண்டியில் ஒருவழிப் பாதையில் வரும் வாகனங்களின் வேகத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த விபத்துக்கு காரணமான தண்ணிர் லாரியை ஓட்டிவந்த டிரைவர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜேந்திரன் விருதுநகரை சேர்ந்தவர்.