பெங்களூரு தெருவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அதிர்ச்சி வீடியோ!

பெங்களூருவில் தெரு ஒன்றில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணை, வாகனத்தில் பின்தொடர்ந்த இருவர், அந்தப் பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் சிசிடிவி பதிவு மூலம் அம்பலமானது.

இந்தச் சம்பவம் பெங்களூருவில் உள்ள கம்மனஹல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது.

சிசிடிவில் பதிவான காட்சியில், ஆட்டோவிலிருந்து இறங்கிய பெண் ஒருவர் தெரு வழியாக நடந்து சென்றுகொண்டிருக்கிறார். அந்தப் பெண்னை இரு சக்கர வாகனத்தில் இருவர் பின்தொடந்து வந்து தடுத்து நிறுத்துகின்றனர். பின்னர் ஒருவர் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்துகிறார். அவரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அந்தப் பெண் தொடர்ந்து போராடுகிறார். சில நிமிடங்களுக்கு பிறகு அந்தப் பெண் “உதவி செய்யுங்கள்” என்று குரல் கொடுக்கிறார். அவரை கீழே தள்ளிவிட்டு அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர்.

இந்தக் காட்சி அந்த தெருவின் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.

பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பர்களுடன் அந்த காட்சி பதிவான சிசிடிவி கேமரா உள்ள வீட்டின் உரிமையாளரிடம் அந்த வீடியோவை கேட்டிருக்கிறார். இதன் அடிப்படையில் தற்போது இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சியின் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது குறித்து பனஸ்வாடி நகர போலீஸ் அதிகாரி கூறும்போது, “சிசிவிடியில் உள்ள வாகனத்தின் நம்பர் பிளேட்டைக் கொண்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இந்தச் சம்பவம் காவல் நிலையத்துக்கு அருகில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை இரவு பெங்களூரு எம்.ஜி. ரோடு, பிரிகேடு ரோடு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக திரண்டிருந்த பெண்கள் துன்புறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

தற்போது மேலும் ஒரு பாலியல் அத்துமீறல் சம்பவம் அம்பலமாகியுள்ளது. இதனால், பெங்களூரு பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்தானா என்று பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்துள்ளன.