அரச பயங்கரவாதத்தை தோலுரிக்கும் ‘விசாரணை’: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!

வெற்றிமாறன் இயக்கி கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த “விசாரணை” திரைப்படம், ஆஸ்கரின் சிறந்த வெளிநாட்டு பட விருதுக்காக இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உத்தா பஞ்சாப், திதி, சாய்ராட் போன்ற 29 படங்களின் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படுவதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ நாவலை தழுவி எடுக்கப்பட்ட ‘விசாரணை‘ படம் தனுஷ்ஷின் வுண்டர்பார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 2015ம் ஆண்டு நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு மனித உரிமைகளை வலியுறுத்தும் படத்துக்கான விருதை வென்றது.

இதுவரை சிவாஜி கணேசன் நடித்த தெய்வமகன், கமல்ஹாசன் நடித்த நாயகன், இந்தியன், குருதிப்புனல், தேவர்மகன் மற்றும் அஞ்சலி, ஜீன்ஸ் போன்ற படங்கள் தமிழிலிருந்து இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.

ராம்குமாரின் மர்மச்சாவு கேள்விக்குட்படுத்தப்பட்டு மனித உரிமை மீறல்களும் அரச வன்முறையும் விவாதிக்கப்படும் தருணத்தில் ‘விசாரணை’ படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படுவது காலத்தின் அவசியமாக சமூக நோக்கர்கள் கருதுகிறார்கள்.

89வது ஆஸ்கர் விருது விழா வரும் பிப்ரவரி 27ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் நடக்கவிருக்கிறது.