பாஜக கூட்டணியை நெருங்கும் வைகோ: மக்கள் நல கூட்டணியில் வலுக்கும் எதிர்ப்பு!
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ஆம் தேதி நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். இதனால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்கள் சொல்லணா துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
மோடி அரசின் இந்த நோட்டு நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. கடந்த 23ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ், இடதுசாரிகள், அதிமுக, திமுக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 200 எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், நாளை (28ஆம் தேதி) இந்தியா முழுவதும் முழு அடைப்பு நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்து, இந்த முழு அடைப்பை வெற்றி பெற செய்வதற்கான ஏற்பாட்டில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், “எப்போதும் சரியான நேரத்தில் தவறான முடிவு எடுப்பவர்” என பெயர் பெற்றிருக்கும் ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ, மோடி அரசின் நோட்டு நடவடிக்கையை வரவேற்றுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை மோடி அரசின் நோட்டு நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோவின் இந்த நிலைப்பாடு மக்கள் நலக் கூட்டணியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘‘500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்ததும் திமுக, தமாகா, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றன. ஆனால், மக்கள் படும் துயரங்களை கண்கூடாகப் பார்த்த பிறகு கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர். வீதிக்கு வந்து போராடவும் தொடங்கியுள்ளனர். இடதுசாரி கட்சிகள் ஆரம்பம் முதலே மோடியின் அறிவிப்பை கடுமையாக எதிர்த்து வருகிறோம். மக்கள் படும் கஷ்டங்களைப் பார்த்த பிறகும் மோடியின் நடவடிக்கையை வைகோ ஆதரித்திருப்பது வேதனை அளிக்கிறது. அவரது இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது’’ என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் மோடி நாடகமாடுகிறார். எனவே, மோடி அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதை ஏற்க முடியாது’’ என்றார்.
ஏற்கெனவே காவிரி விவகாரம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுவை நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் உள்ளிட்ட பிரச்சனைகளில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இச்சூழலில் மீண்டும் கூட்டணியில் மோதல் ஏற்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளில் ஒன்றுடன் கூட்டு சேர்ந்தாக வேண்டும் என்கிற அரசியல் சூழலில், வைகோ பா.ஜ.க. கூட்டணியை நெருங்கிக்கொண்டிருக்கிறார் என்பதையே அவரது மோடி ஆதரவு நிலைப்பாடு உணர்த்துகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், வைகோ பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்று, மோடியை பிரதமராக்குவதற்காக அவரை தோளில் தூக்கி சுமந்தார் என்பது நினைவுகூரத் தக்கது.