“பிர்லா, சஹாராவிடம் லஞ்சம் வாங்கிய மோடி ஒரு திருடர்”: குஜராத் மக்கள் ஆவேசம்!

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது பிர்லா, சஹாரா நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற முடக்கம் தொடர்பாக நிருபர்களிடம் அண்மையில் பேசிய ராகுல், நாடாளுமன்றத்தில் தன்னை பேச அனுமதித்தால் நரேந்திர மோடியின் ஊழல் விவகாரங்களை வெளியிடுவேன், அவையில் பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் மெஹ்சனாவில் புதனன்று நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் மோடி மீது ராகுல் காந்தி அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இது மோடியின் சொந்த மாவட்டமாகும். அங்கு ராகுல் காந்தி பேசியதாவது:

சஹாரா குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையின்போது அந்த நிறுவனத்தின் முக்கிய டைரிகள் கைப்பற்றப்பட்டன. அதில் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2013 அக்டோபர் முதல் 2014 பிப்ரவரி வரை 9 முறை அவருக்கு பணம் அளிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, பிர்லா நிறுவனங்களில் இருந்தும் முக்கிய டைரிகளை வருமான வரித் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ரூ.12 கோடி பணம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த டைரிகள் கடந்த 2014ஆம் ஆண்டிலேயே வருமானத் வரித் துறையினரின் வசம் உள்ளன. ஆனால் இதுவரை எவ்வித விசாரணையும் நடத்தப்படவில்லை. இவை தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஏழைகள், விவசாயிகள் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதல் ஆகும். இந்த நடவடிக்கை மூலம் ஏழைகளிடம் இருந்து பணத்தை பிடுங்கி 50 பெரிய நிறுவனங்களுக்கு பணம் கைமாறி வருகிறது. அந்த பெரிய நிறுவனங்கள் வங்கிகளுக்கு பெரும் கடன் தொகையை செலுத்தாமல் ஏமாற்றிய வரலாறு கொண்டவை.

குஜராத் மாநிலத்தில் பாஜக மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. தலித்துகள், படேல் சமூகத்தினர் மீது போலீஸ் அராஜகம் ஏவி விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

சுமார் 40 நிமிடங்கள் ராகுல் பேசினார். பிரதமர் மோடிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியபோது பிர்லா, சஹாரா நிறுவனங்களின் டைரியில் எழுதப்பட்ட வாசகங்களையும் அவர் வாசித்தார். அப்போது கூட்டத்துக்கு வந்திருந்த மக்கள் “மோடி ஒரு திருடர்” என்று ஆவேசமாக முழக்கமிட்டனர்.