கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம்: புகைப்படம் வெளியீடு!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது போல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தின் கீழ், “திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் தேறி வருகிறார். அவருக்கு அளிக்கப்பட்டுவரும் ஆன்டிபயாடிக் மருத்துவ சிகிச்சை முடிவு பெற்றவுடன் வீடு திரும்புவார்” என மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், “கருணாநிதி உடல்நலம் தேறி வருகிறார். அவர் விரைவில் வீடு திரும்புவார்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.