மாவோயிஸ்டுகள் களத்தில் இறங்கினார்கள்! டாஸ்மாக் கடை மூடப்பட்டது!!

கோவை மாவட்ட எல்லையான கேரள வனப்பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இதனால் கேரள அரசினால் அப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், கேரள எல்லையை அடுத்த தமிழக பகுதியான ஆனைகட்டியில் தமிழக அரசின் டாஸ்மாக் கடை எண்: 2222 இயங்கி வருகிறது. இதனால் எல்லை பகுதியில் வசித்து வரும் பழங்குடிகள் ஆனைகட்டி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைக்குவந்து மது அருந்தி செல்கின்றனர்.

பழங்குடி  மக்கள் மதுவுக்கு அடிமையான நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 147 பேர் மது குடித்ததால் உயிர் இழந்ததாக அங்கு களப்பணியாற்றுகிறவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஏராளமான இளம்பெண்கள் விதவையாகி உள்ளனர். எனவே, தங்களது இனத்தை அழிக்கும் டாஸ்மாக் கடையை மூடக் கோரி கடந்த 2 மாதங்களாக பழங்குடி பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் கடையடைப்பு மற்றும் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த ஆதிவாசி பெண்கள் முடிவு செய்தனர்.

இதனிடையே, “வெள்ளிக்கிழமைக்குள் ஆனைகட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட கடை அடித்து உடைக்கப்படும்” என தமிழக எல்லையான எழச்சவெளி கிராமத்தில் மாவோயிஸ்டு அமைப்பின் பெயரால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்த நிலையில் சனியன்று திடீரென ஆனைக்கட்டி டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டது. அந்தப் பகுதியில் கடை எண்: 2222 அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.